சாதி

சாதி
யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே ஆறு மைல் தூரத்தில் காங்கேயன் துறைக்கு போகும் பாதையில் அமைந்த கிராமம் சுன்னாகம். சுண்ணாம்பு கற்கள் உள்ள உள்ள பூமியில் கிராமம் அமைந்த படியால் ஊர் பெயர் வந்ததுக்கு ஒரு விளக்கம் உண்டு. ஒரு காலத்தில் இக்கிராமத்தில் மலையாளிகள் வசித்தபடியால் மயிலினி என்ற பெயரும் அவ்வூருக்கு இருந்தது. நன்நீருக்குப் பிரபல்யமான கிராமம என்ற படியால் மரப் பீப்பாயுக்குள். நீர்தேக்கி ரயலில்கொழும்புக்கு அனுப்பிய காலமும் உன்டு. அத்தகைய நல் நீர் சுற்றுபுறக் கிராமங்களில்இருப்பதால் அங்கு காணி விலை அதிகம்
மலேசியாவில் பலகாலம் வேலை செய்து , செல்வந்தராக வந்து, சுண்ணாகத்துக்கு கிழக்கே புததூருக்குப் போகும் பாதையில், ஒரு மைல் தூரத்தில் உள்ள கிராமமான ஊரெழுவில், நாற்பது பரப்பில் சிவந்த மண் உள்ள நிலம் வாங்கி, ஐந்தஅறையில் வீடு கட்டினவர் பொன்னுத்தமபிப் பிள்ளை அவர்கள். எதை நட்டாலும் பசுமையாக வளரும் பூமி என்றபடியாலும் பொன்னுத்தமபி பிள்ளை காணிக்கு உரிமையளர் என்பதாலும் அதற்கு “பொன்னுவளவு” என்ற பெயரை ஊர்வாசிகள் வைத்தனர். பொன்னுத்தம்பியின் தந்தை உயர் வேளாளச் சாதியைச் சேர்ந்த செல்லத்தம்பி முதலியார், மனியகாரராக இருந்தவர். பிரித்தானியர் ஆட்சியின் போது கிடைத்த பட்டம் முதலியார். ஆறு பிள்ளைகளுக்கு தந்தையான அவர் பல காணிகளுக்கு சொந்தக்காரர். அதுவுமல்லாமல் அவர் மயிலினி சிவன் கோவிலுக்கும், முருகன் கோவிலுக்கும் தர்மகர்த்தவாக இருந்தவர். பொன்னுத்தமபி பிள்ளை, அவரின் மூத்த மகன். மலேசியாவில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை கிடைத்து ஈபோவுக்கு போய்’ பணம் சம்பாதித்தவர். செல்லத்தம்பி முதலியாரின் மறைவுக்குப் தர்மகர்த்தா பதவி பொன்னுத்தம்பிக்குப் போய் சேர்ந்தது. தந்தைபோல் பொன்னுத்தம்பியாரும் சாதி பாகுபாடு காட்டுபவர். அவர் ஒருவரே சுண்ணாகத்தில் ஒஸ்டீன் ஏ 40 கார் சொந்தமாக வைததிருதவர். அவர் வீதியில் நடந்து போனால் சைக்கிளைவிட்டு இறங்கி வழிவிட்டு போவார்கள்.
பொன் வளவில் உள்ள கினற்றுத் தண்ணீருக்கு தனி சுவை உண்டு. செழித்து வளர்ந்த மா, பலா. நெல்லி, நாவல் வாழை ஈரப் பிலா மரங்களுக்கு பொன் வளவில் குறைவில்லை. உயர் சாதி மக்களைத் தவிர்த்து அவர்களுக்கு வேலை செய்யும் குடிமக்களும்,. கள் இறப்போரும். கூலிவேலை செய்வோரும் அக் கிராமத்தில் வாழ்ந்தனர்.
பொன்னுத்தம்பி குடும்பத்துக்கு பரம்பரை பரம்பரையாக வேலை செய்து வந்தவன் செல்லனும் இப்போது வேலை செய்பவன் செலவனின் ஐம்பது வயதுடைய மகன் சின்னன் என்ன்ற சின்னத்துரையும். சின்னன் ஆறடி உயரம். திடகாத்திரமான உடல். பனை மரத்தில் கள் இறக்குவது, விறகு வெட்டுவது, காணியில் உள்ள மரங்களை பராமரிப்பது, வளவில்’ உள்ள ஆடு, மாடுகளைக் கவனிப்பது, வேலி அடைப்பது, ஆறு மாதத்துக்கு ஒரு தடவை கிணறைக்’ கழுவி சுத்தப் படுத்தவது சின்னனின் வேலைகள். பொன்னுத்தம்பி வளவில் வேலை செய்வதை பெருமையாக கருதியவன். பொன்னுத்தம்பியாரின் மனைவி அன்னம்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். பொங்கல் தீபாவளிக்கு சின்னாவுக்கு பொன்னுத்தம்பி குடும்பத்தில் இருந்து புது ஆடைகள்கிடைக்கும். அதுவுமல்லாமல் கண்டியில் தேயிலைத் தோட்டத் துரையாக இருக்கும் அன்னம்மாவின் அண்ணன் செலவரசவுக்கு அவன் மேல் தனிப் பிரியம். லீவில் ஊரெழு வரும்போது அவர் சின்னன் கேட்காமலே பணம் கொடுப்பார்.
“ சின்னா நாளைக்கு எண்டை செல்வா அண்ணாவும் குடும்பமும் கண்டியிலை இருந்து ஒருகிழமை லீவிலை தீபாவளிக்கு வருகினம். அவர் சுத்தம் பார்க்கிறவர் என்று உனக்கு நல்லாய் தெரியும்.. தினமும் இரண்டு தடவை குளிப்பார். அவருக்கு பனங் கள்ளுஎன்றால் நல்ல விருப்பம். அதாலை நாளைக்கு மறந்திடாமல் கிணத்தைக் கழுவி சுத்தம் படுத்திப் போடு. அதோடை அடி வளவிலை உள்ள பனை மரத்திலை ஐயாவுக்கும் எண்டை அண்ணருக்கும் கள் இறக்கி கொடுக்க மறந்திடாதே. சாப்பாட்டுக்கு’ அண்ணாரின்டை மனுசியின் தாய் தந்தை , சகோதரி குடும்பம் தீபாவளிக்கு இங்கை வருகினம். கொட்டிலில் உள்ள கிடாயை நீ தான வெட்ட வேண்டும். மறந்துடாதே என்ன?
“ சரி அம்மா . போன வருசமும் தீபாவளிக்கு அவர் வந்தபோது பங்கு இறைச்சி இளையவனிடம் வாங்கிக் கொண்டு வந்து தந்தனான். அது அவ்வளவு நல்ல இறைச்சி இல்லை. அவன் கொழுப்பு அதிகம் போடவில்லை. ஐயா எனக்கு குறைப்பட்டுச் சொன்னது நினைவு இருக்குது” என்றான் சின்னன்.
“ அதுக்குதான் போனவருசமே கிடாய் வாங்கி இந்த தீபாவளிக்கு வெட்ட விட்டனான். அதோடை கன சனம் சாப்பாட்டுக்கு வருகுது.” பொன்னுத்தம்பியின் மனைவி அன்னம்மா சொன்னாள்.
“ இந்தமுறை கிடாய் வெட்டக்கை இரத்தம் எல்லாம் சிந்தாமல் பிடித்து த் தாறன். உங்கடை அண்னாவுக்கும், ஐயாவுக்கும் வறை வறுத்து குடுங்கோ. அவையளிண்டை உடம்புக்கு நல்லம். இருவருக்கும் இரத்தக் கறி எண்டால் நல்ல விருப்பம்.”
“சரி’ நீசொன்னபடி செய். சமையலுக்கு விறகு முடியப்போகுது. அடிவளவுக்குள்ளை இருக்கிற பிலா மரகுத்திகளை சின்ன துண்டுகளாக வெட்டிப் போட்டுப் போ. வீட்டைப் போகக்கை அவள் தேவியை நான் சொன்னதாக வரச்சொல்லிப் போட்டுப் போ. இடியப்பதுக்கும் புட்டுக்கும் மா இடிக்கவேணும்” அன்னம்மா சின்னனுக்கு ஞாபகப்படுத்தினாள்
“ சொல்லுறன் அம்மா. “ தலையை சொரிந்து கொண்டு சின்னன்’ நிற்பதைக் கண்ட அன்னம்மா
“ ஏன்டா தலையை சொரிந்து கொண்டு நிற்கிறாய். என்ன வேண்டும் உனக்கு”?
“ சரியாயக தண்ணி விடாய்குது ஏதும் கொஞ்சம் தண்ணி ஏதும் தாறியலே” சின்னன் தாழ்ந்த குரலில் கேட்டான்.
“ அந்த வேலியிலை தொங்குற சிரட்டையை எடு. நான் ஊத்தின தேத்தண்ணி இருக்கு தாரன்” பதில் சொல்லி விட்டு குசினிக்குள் அன்னம்மா சென்றாள். தேத்தண்ணியோடு திரும்பிவந்த அன்னம்மா சின்னன் மேல் தன் கைபடாமல்அவன் நீட்டிய சிரட்டைக்குள் ஊற்றினாள். நிலத்தில் ஒரு கருப்பட்டி துண்டை வைத்தாள். கருப்பட்டியை கடித்தவாரே சிரட்டையில் இருந்த தேத்தண்ணியை உறிஞ்சிக் குடித்தான் சின்னன்
தேத்தண்ணி குடித்து முடித்து சின்னன் போகமுன் “ சின்னா ஓன்றுசொல்ல மறந்திட்டன் நாளைக்கு’ வரைக்கே உண்டை மருமகன் பாலனையும் உதவிக்கு கூடிக்கொண்டு வர மறந்திடாதே என்ன?”
“நாளைக்கு பள்ளிக்கு அனுப்’பாமல்அவனை வேலை இருக்கு வா எண்டு கூட்டிக் கொண்டு வாரன் அம்மா”
“ அது சரி இப்ப அவன் எத்தினாம் வகுப்பு படிக்கிறான்” ?
“ அதையேன் அம்மா கேட்கிறியல். தான் அன்டனிமுத்து போலப் படித்து பட்டம் பெற்று டீச்சர் ஆகவேனுமாம்”
“ கத்தோலிக்கனாக மதம் மாறிய உண்டை பெரியப்பா மகன் அன்டனிமுத்து தனே பாலன் சொல்லுற டீச்சர்? அவன் தான் அம்மா பாலனைப் பழுதாக்கிறான். எங்கடை சாதி படித்து பெரிய உத்தியோகம் பார்க்க உயர் சாதிசனங்கள் விடமாட்’டினமாம். அதுக்கு தன்னைப்போல மதம்மாறி படிக்க வேண்டுமாம். எப்படி இருக்கு அவன்டை கதை. எங்கடை பரம்பரை, ஐயாவிண்டை பரம்பரை.க்கு வேலை செய்து வருகிறோம். அதாலை குடி மகன் என்ற பெயர் எங்களுக்கு.அது இப்ப காலத்துபெடியங்களுக்கு விளங்குது இல்லை அம்மா” சின்னன் கவலையோடு சொன்னான்.
“ சரி சரி நீ அவனிடம் நல்ல அன்னபாகப் பேசி ட் கொண்டு வா என்ன.? இந்தா நாளைய கூலி”” பணத்தை சின்னன் கையில் கொடுக்காமல் நிலத்தில் அன்னம்மா வைத்த்தாள்
“ சரி அம்மா அப்ப நான் நாளைக்கு விடிய எட்டு மணிக்கு பாலனோடை வாரன்”, பணத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு’ சின்னன் சென்றான்.
*******
மறு நாள் காலை சொன்ன நேரத்துக்கு சின்னனும் பாலனோடு வந்ததும் முதலில் இருவரும் சேர்ந்து விறகை வெட்டி போட்டு, அவனும் பாலனும் கிணற்றை துப்ர்வாக்க தொடங்கினர்கள்’. முதலில் பாலன் துலா மிதிக்க சின்னன் பெரிய பட்டையின் உதவியோடு கிணற்று நீரை இறைத்தான்.
“பாலா கிணற்றுக்குள்ளை சரியான பாசி இருக்கு நன் இறங்கிப் பாசியை சுத்தம் செய்து பட்டையிலை நிறப்பிறன். நான் சொன்னதும் நீ பட்டையை மேலை இழு” மருமகனுக்குகட்டளை இட்டபின் கிணற்றுக்குள் இறங்கி பாசியை சுத்தப் படுத்த தொடங்கினான் சின்னன். பாசியால் அடைக்கபட்ட நீர் ஊற்றுகளின் தடைகள் நீக்கப்பட்டதால் தண்ணீர் குபு குபு வென்று வரத்தொடங்கியது. கடுமையாக வெயிலில் வேலை ர் செய்ததால் சின்னனின் வியர்வை சிந்தி கிணற்று நீரோடு பிளந்தது.
“ மாமா வடிவாக கிணற்றை சுத்தம் செய்து போட்டாய். சரியாக களைத்துப் போனாய் இனி மேலே வா. நான் போய்’ சேர்ந்த பாசி குப்பைகளை அடி வளவிலை கொட்டிப் போட்டு வாரன்” பாலன் மாமனுக்கு சொன்னான்
“ கொஞ்சம் பொறு. நான் இந்த கொண்டூஸ் என்ட இராசயன மருந்தை தண்ணீர்சுத்தமாக இருக்க கலந்துபோட்டுவாரன்” சின்னன் மருமகனுக்குச் சொன்னான்.
கிணற்றை சுத்தம் படுத்த இருவருக்கும் ஒரு மணி நேரம் எடுத்தது.
இருவரும் களைத்து போனார்கள்.
“ மாமா எனக்கு சரியாக தண்ணி விடாய்குது. கொஞ்சம் கிணற்றிலை தண்ணி அள்ளி குடிக்கட்டே”? பாலன் மாமனை கேட்டான்.
“ எடேய் என்ன் கதைக்கிறாய்? நாங்கள் கிணற்றிலை தண்ணி அள்ளி குடிக்கிறதை அம்மாகண்டால் சத்தம் போடுவா””
என் மாமா நங்கள் ,இந்த கிணற்றிலே தாகத்துக்கு தண்ணி அள்ளி குடித்தால் என்ன குற்றம்?’
“ நாங்கள் கீழ் சாதி மக்கள் உயர்’ சாதியினர் வீட்டு கிணற்றிலை தண்ணீர் அள்ளி குடிகக்கூடாது. இது தான் இந்த ஊர் முறை”
பாலன் கேக்கட்டம் விட்டு சிரித்தான்.
“ ஏன்டா சிரிக்கிறாய்”?
“ இல்லை மாமா. நீ கிணற்றுகுள்ளை இறங்கி வேலை செய்த போது உண்டை வியர்வை சிந்தி கிணற்று நீரோடை கலந்து விட்டது. அந்த நீரைத்தானே இந்த வீட்டுகாரர் குடிக்கப் போகினம் அது துடக்கு இல்லையா.” பாலன் யதார்த்தமாக கேள்வி கேட்டான்.
சின்னனால் பதில் சொல்ல முடியவில்லை

********

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (16-Apr-17, 8:44 am)
Tanglish : saathi
பார்வை : 330

மேலே