ராமன் - கிருஷ்ணன்
அவர் சிரஞ்சீவி அல்லவா? யுகம் முடிந்தாலும் தன் உயிருக்குயிரான ராமனையே ஆஞ்சநேயர் நினைத்து ஜெபத்தில் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கடத்தினார். அடுத்த யுகமான துவாபர யுகம் வந்துவிட்டது.
ஒருநாள் நாரதர் ஆஞ்சநேயரைச் சந்தித்தார்.
"ஆஞ்சநேயா இன்னும் எத்தனை நாள் ராமனையே நினைத்து ஜபம் செய்வாய்?"
"நாரதா, முனீஸ்வரா, என் மூச்சே ராமன் தான் ஆகவே மூச்சு முடியும் வரை ராமன் தான் எனக்கு எல்லாம்."
நாரதர் சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறாய் நாரதா?"
"நிஜத்தை விட்டு நிழலையே தேடிக்கொண்டு இருக்கிறாய் என்றபோது எனக்குச் சிரிப்பு வந்தது"
"எனக்குப் புரியவில்லையே""
"எப்படிப் புரியும். புரிந்து கொள்ள முயற்சித்தால் அல்லவோ புரியும்!"
நாரதா நிஜம்-நிழல் என்கிறாய், என் ராமன் நிழலா?"
"ஆம், வேறென்ன. நாராயணின் ராம அவதாரம் முடிந்தவுடன் ராமன் வேறு அவதாரம் எடுத்துள்ளார் இந்தப் புது யுகத்தில்!"
"ராமர் என்னவாக அவதாரம் எடுத்துள்ளார், எங்கிருக்கிறார் சொல்லேன்?"
"இந்த துவாபர யுகத்தில் அவர் கிருஷ்ணன். த்வாரகையில் உள்ளார். அவரிடம் பேசும்போது தான் உன்னைப் பற்றியும் பேச்சு வந்தது".
"என் பிரபு என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாரா. நான் அவரைப் பார்க்க வேண்டுமே "
"உனக்கு அவரைப் பார்க்க வேண்டுமானால் ஒரு மாறு வேடத்தில் துவாரகை வா. அங்கு ராம நவமி அன்று அன்னதானம் செய்". "நான் அப்புறம் உன்னைப் பார்க்கிறேன்". நாரதர் நகர்ந்தார்.
ஆஞ்சநேயர் ஒரு பிராமணன் வேடத்தில் துவாரகையில் ஸ்ரீ ராம நவமி அன்று அன்னதானம் அளித்தார். எண்ணற்றவர்களுக்கு தன் கையாலேயே அன்னமிட்டார். வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும் அயராது ஆஞ்சநேயர் குனிந்து அனைவருக்கும் இலையில் அன்னமிட்டார்.
"என்ன இது? தலை சுற்றியது அஞ்சநேயருக்கு! ஒரு வரிசையில் கால் மடக்கி அமர்ந்திருந்த ஒரு வயோதிக பிராமணருக்கு எதிரில் ஆஞ்சநேயர் குனிந்து கையில் அன்ன வட்டிலோடு நின்றவர் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்தார். ஏன்? ஏன் ? இது எதற்காக? நான் என்ன அபச்சாரம் செய்து விட்டேன்?"
அந்த மனிதரின் கால்கள் அவருக்கு நிறையப் பரிச்சயமானவை. சாக்ஷாத் ராமனின் கால்கள். “பிரபு என்னை இப்படியா சோதிக்கவேண்டும்?” அலறினார் ஆஞ்சநேயர். பிராமணர் சிரித்தார். மெதுவாக எழுந்தார். அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பிராமணரான நாரதரும் எழுந்தார். வேடத்தைக் களைந்து கிருஷ்ணன் ஆஞ்சநேயனை அணைத்துக் கொண்டார். நீண்ட பிரிவல்லவா?
"ஆஞ்சநேயா. உன்கையால் சாப்பிட ஆசை வந்தது. எனவே நானும் நாரதரும் உன்னைக்காண வந்தோம்"
"பிரபு எனக்கு ஒரு வருத்தம்!"
"என்ன ஆஞ்சநேயா?"
"நான் உடனே துவாரகைக்கு வரவேண்டும் உங்களையும் என் தாய் சீதா பிராட்டியையும் சேர்த்தே பார்க்கவேண்டும்."
"வாயேன் எங்களோடு"
ஆஞ்சநேயர் ருக்மிணி என்கிற உருவில் தன் மாதாவைக் கண்டார். பலராமன் என்ற உருவில் லக்ஷ்மணனையும் கண்ணாரக் கண்டு களித்தார்.
பேச்சே எழவில்லை. எனக்கும்........
Courtesy Sri Mannargudi Sitaram Srinivasan.