இப்படிக்கு ராகவனின் எழுதுகோல்
இப்படிக்கு ராகவனின் எழுதுகோல்
-செல்வம் கந்தசாமி
எழுத்தாளர் ராகவன் “ கதையின் கதை” என்ற தலைப்பில் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிக்கொண்டிருந்த கதையின் நாயகன் சங்கர். காலை 6 மணி அவன் எழும் நேரம். அன்றும் அவனின் கடிகார அலாரம் அப்படிப்படியே எழுப்பியது. எழுந்து அவன் பங்களாவின் பால்கனியை திறந்தான். பகலவனின் மஞ்சள் நிறக்கதிர்கள் தன் கைவிரிக்க, சூரியனின் பார்வை பட்டவுடன் மேகக்கூட்டம் பனியென விலக, தென்றல் குளிர்ந்த காற்றால் அவன் தேகத்தை வருடியது. அவ்வழகிய சூழலில், எப்பவும் பூட்டிய நிலையில் இருக்கும் சிறிய எதிர் வீட்டின் முன் யாரோ ஒரு பெண் கோலமிட்டுக்கொண்டுருந்தாள். நேர்த்தியாக முடியப்பட்ட அவளின் ஈரமான நீண்ட கருநிற மேகக்கூந்தல், சத்தமில்லாமல் பேசும் அவளின் கயல் விழிகள், இரண்டு வானவில்லை வளைத்து வைத்தது போன்ற இரு புருவங்கள், அதனிடையே வைக்கப்பட்ட பொட்டு, சிவந்த கழுத்தில் கொட்டும் வெள்ளை அருவி போன்று அணியப்பட்ட மணிமாலை என ஒவ்வொன்றாக அவளின் உச்சி முதல் பாதம் வரை ரசித்துகொண்டிருந்தான் சங்கர். அவள் வீட்டின் உள்ளே சென்றவுடன் அவன் தான் எங்கு உள்ளோம் என உணர்ந்தான்.
சங்கர் வீட்டிற்கு ஒரே பையன். மிகவும் வசதியானவன். அவனின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பதால், தந்தையின் அலுவலகத்தை கவனித்து கொண்டு, தனியாக வசித்துவருகிறான். வழக்கம் போல் அன்றும் அலுவலகத்திற்கு சென்றான். அவனுக்கு அனைவரும் வணக்கம் வைக்க, தன் அறைக்குள் நுழைந்தான். பின் ப்யூன் வந்து “ சார் இன்னிக்கு இன்டர்வியூக்கு ஐந்து பேர் வந்துர்க்காங்க.” என்றான்.”ஓகே ஒவ்வொருவராக அனுப்பு” என்றான் சங்கர். முதலில் ராதா என்ற பெண்ணை அனுப்புவதாக சொல்லி சென்றான். “மே ஐ கமின் சார்” என்று அனுமதி கேட்டு கதவை திறந்தாள் ராதா. அவளின் வருகையை சற்றும் எதிர்பாராத சங்கர், வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான். அன்று காலை யாரை தாவணியில் பார்த்தானோ!! அவளை கொஞ்சம் மாற்றலாக சேலையில் கண்டான். ராதாவோதன்னை பற்றிய விபரங்களை அவனிடம் கூறிக்கொண்டிருந்தாள். சங்கரின் காதில் அவளின் குரல் ராகம் பாடியது. “ சார் நான் ராதா... BBM முடித்திருக்றேன். இங்க PA வேலைக்கு வந்துருக்கேன்” என்றாள். அவளது சான்றிதழ்களை பார்த்த சங்கர் “ வரும் திங்கள் முதல் நீங்க வேலைக்கு வரலாம்” என்றான். ராதா மகிழ்ச்சி மிகுதியில் அவனுக்கு நன்றி கூறிவிட்டு விடைபெற்றாள். வீட்டிக்கு விரைந்த ராதா, தன் அம்மா விமலாவிடம் தனக்கு வேலை கிடைத்த செய்தியை கூறி ஆசிபெற்றாள். விமலா “எனக்கும் ரொம்ப சந்தோசம் தான் டாம்மா!! இனிதான் நீ கவனமாக இருக்கனும். உன்னை சுத்தி நல்லவங்களும் இருப்பாங்க, அதேமாதரி கெட்டவங்களும் இருப்பாங்க. நாம தான் கவனமாகவும், பொறுப்பாவகவும் இருக்கணும். உங்க அக்காகோமதி வாழ்க்கையை பற்றி உனக்கே தெரியும். ஒரு பணக்கார பையனை காதலிச்சு திருமணமும் பண்ணி, இப்ப வாழ வெட்டியா!!நம்ம வீட்ல வந்து உட்காந்திருக்கா, அவ வாழ்க்கையை பத்தின கவலைலையே உங்க அப்பாவும் இறந்து போயிட்டாரு, இன்று யாருடைய ஆதாரவும் இல்லாம இருப்பது உனக்கே தெரியும். நீயாது நம்ம குடும்ப மானத்த காப்பதுவேன்னு நம்புறேன்.” என்றாள்.
ராதா முதல்நாள் வேலைக்கு சென்றாள். அலுவலகத்தில் சங்கரைப்பற்றி கேட்டறிந்தால் அவன் நல்லவனென்று. காதல் வயப்பட்ட சங்கரோ காதலை சொல்லாமலே மாதங்களை கடத்தினான். ராதாவின் எதிர்வீட்டில் தான் சங்கர் இருப்பதையும், தினமும் காலையில் தன்னை பார்ப்பதற்கு அவன் வீட்டின் பால்கனிக்கு அவன் வருவதையும் நன்கு அறிவாள் ராதா. ஆனால் அது தனக்கு தெரியாதது போல சங்கரின் முன் நடந்து கொள்வாள். தன் குடும்ப சூழ்நிலையையும், அக்கா கோமதியின் வாழ்க்கையையும் எண்ணி, காதலிக்கும் ஆண்களையே வெறுத்தாள். வழக்கம் போல அன்றும் சங்கரிடம் சென்று, அன்றைய பணியை கேட்ட பொழுது, சற்றென்று அவன் அவளிடம் “உன்னிடம் கொஞ்சம் பெர்சனலா பேசனும். உன்னை திருமணம் செய்ய ஆசைபடுகிறேன்.” என்று கூற, அதைனை அவள் ஏற்கவில்லை. இப்படி மூன்று ஆண்டுகள் கடந்தது. ராதாவின் பதிலுக்காக இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தும் அவள் பதில் கூறவில்லை என்பது சங்கரின் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. மிகவும் நொந்து காணப்பட்டான். அன்று ராதாவிடம் பதிலை கேட்க முனைந்தான் “ நான் உன்னை விரும்பறது உனக்கே நல்ல தெரியும். உன் பதிலுகாகதான் இவ்ளோ வருஷமா காத்துட்டு இருக்கேன்னும் தெரியும். என்னால உன்னை மறக்க முடியல. உன் பதிலுக்காக காத்துட்டு இருந்தது போதுன்னு நினைக்றேன் ராதா. ப்ளீஸ் உன் பதில சொல்லுமா.”என்றான்.ஆனால் என் குடும்ப சூழ்நிலையாலும், என் சூழ்நிலையாலும் தங்களின் காதலை ஏற்று கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். நீங்கவேற ஒரு நல்லபொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கொங்க” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் சங்கர் சற்றென்று மயங்கிவிழுந்தான். உடனே மருத்துவமனையில் சேர்க்க படுகிறான். அவனை பரிசோதித்த மருத்துவர் “அவர் உடலவிலும், மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். வரும் பதினாறாம் தேதி பதினோரு மணிக்கு ஓர் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்” என்று கூறினார். விபரமறிந்து சங்கரை காண மருத்துவமனைக்கு வந்தாள் ராதா.அவளிடம் “ பதினாராம் தேதி காலை ஒன்பது மணிக்கு உன் பதிலுக்காக காத்துருப்பேன். அது நல்ல பதிலாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த ஆபரேஷன்ல எனக்கு என்னவேனாலும் நடக்கலாம். அதற்கு முன்னாடி உன் பதிலுக்காக காத்துகொண்டு இருப்பேன்.” என்றான் சங்கர். இவ்விஷயம் அரசால் புரசலாக விமலாவுக்கு தெரியவந்தது.
பதினாராம் தேதியன்று காலை சங்கரை காண்பதற்கு, மிகவும் அழகாக அலங்காரம் செய்து புறபட்டாள். விமலாவிடம் கூறிவிட்டு விடை பெற்ற போது “ நீ எடுக்கும் முடிவு நம் குடும்ப கௌரவத்தை பாதிக்காது என நம்புகிறேன்” என்றாள். சங்கர் அன்று காலை முதலே அவளின் வருகையை எதிர்நோக்கி கொண்டிருந்தான். அவனின் அறையில் காலெடுத்து வைத்தாள் ராதா..... என்று எழுதுகையில் எழுத்தாளர் ராகவன் மரணமடைந்துவிட்டார். உங்களை போலவே எனக்கும், ராதா சங்கரிடம் பதிலை கூறினாளா? சங்கர் மறுவாழ்வு பெற்றானா? விமலாவின் வார்த்தை நிறைவுபெற்றதா? என்று பல கேள்விகளுடன்,இக்கதையின் முடிவை அறியாமலே விடைபெறுகிறேன்!!!!!!!!!! இப்படிக்கு எழுத்தாளர் ராகவனின் எழுதுகோல்......
முற்றும்
குறிப்பு : எனது இந்த கதை “ ஸ்நாக்ஸ் ” வார இதழின் மதுரை பதிப்பில் ஏப்ரல் மாதம் 2015 மற்றும் சிறுகதை இணையதளத்திலும் வெளிவந்துள்ளது என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.