மண்ணின் மைந்தன்

மண்ணின் மைந்தன்
வித்தோடு சேர்த்து
வியர்வையையும்
விதைத்துக் கொண்டிருந்தார்
குப்பண்ணா..

உழுத செங்காட்டு நிலமாய் ஓடின
முகமெங்கும் வயதின் ரேகைகள்

கபாலக் குழி தாண்டி
சுட்டெரிக்கும் வெப்பம் தணிக்க
சவரமறியா தாடி பற்றி
மெல்லெனச் சொறிந்தவாறே
காட்டோரம் சிக்கனமாய்
மூன்றே கிளை சுமந்து
சொற்ப நிழல் சொரியும்
பனைமரத்தடியின்
பாதி தூக்கிய கல் மீது
பத்திரமாய் அமர்ந்தார்...

மழையறியா தரிசுக்காடாய்
விரிசல்கள் தாங்கிய மனதோடு

சாலையோர செம்மண்பூமி
சட்டென விலைபோகும்
வீட்டு மனையாக்கி
விற்றுவிடு என
விருட்டென்று சொல்லிவிட்டான்

வெளிநாட்டு மோகம்
உள்நாட்டை விலை பேசுகிறதே
சேற்றில் நான் கால் பதித்திரா விட்டால்
சோற்றில் அவன் கை எவ்வாறு?

காட்டின் வலநெடுக்கே
வளைந்தோடும் சிற்றோடை
சேற்று மணல் தெளித்து
பட்டாய் தலை தேய்க்க
விடுக்கென பிடுங்கி ஓடும்
வேட்டையனா இவ்வாறு
ஏதேதோ கேள்விகளில்
தொங்கி நின்றது மனது

இராப்பகலாய் கண்விழித்து
முற்றிய நெல்லறுத்து
களம் சேர்த்து போரடித்து
களஞ்சியத்தை வழியவைத்து
ஊர்கோவில் பொங்கலுக்கு
உணவிட்ட காமதேனு

முடிவுக்கு வந்தவராய்
இடுப்பு வேட்டி இறுகக கட்டி
மண்ணள்ளி நெற்றிபூசி
மாறுதல் இல்லையென
மனதிற்கு பலமுறை சொல்லி
கோவிலுக்கு சொந்தமிது
உரிமை எவர்க்குமில்லை
உயில் எழுதி வேட்டையனின்
முகம் உமிழ்ந்தார் குப்பண்ணா!.............
சு.உமாதேவி
ச்

எழுதியவர் : சு உமாதேவி (16-Apr-17, 7:08 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : mannin mainthan
பார்வை : 327

சிறந்த கவிதைகள்

மேலே