வில்லன்
‘டேய் மணி, அண்ணனுக்கு அந்த சீனை சொல்லிடுறா” டேக்குக்கு போகணும், டைரக்டர் வர்ற நேரமாச்சு என்று சொன்னான் அஸிஸ்டெண்ட் டைரக்டரான விஜி என்ற விஜயசேகரன்.
“அண்ணே, நல்ல இருட்டு, தனியா உறீரோயின் வர்றாங்க, நீங்க அவங்கள வழிமறிக்கீறீங்க, உறீரோயின் மிரண்டு ஓடுறாங்க, நீங்களும் விடாம துரத்துறீங்க. அவங்க பாழடைஞ்ச பங்களாவுக்குள்ளாற ஓடி ஒளிஞ்சுக்கிறாங்க.
நீங்க பங்களாவுக்குள்ளாற ஒவ்வொரு இடமா தேடுறீங்க, கண்ணுல தட்டுப்படல….. “அட, சே, மிஸ் பண்ணிட்டோமோன்னு” ஒரு நிமிஷம் யோசிக்கீறீங்க. ஆனா சுதாரிச்சுட்டு பங்களா முழுசும் ஒவ்வொரு அங்குலமா ஒங்க கண்களை ஓட விடறீங்க. கடைசில உறீரோயின் ஒங்க கண்ணுல சிக்கிக்குறாங்க.
உறீரோவை, கட்டிப்பிடிச்சு…..அவளோட புடவையை உருவி தூக்கி எறிஞ்சுட்டு….பலமா வீரப்பா மாதிரி சிரிச்சுகிட்டே, ஏன் என்னை இவ்ளோ தூரம் ஓட விட்டே, ஒழங்கா என்னோட ஆசைக்கு இணங்கிடு அப்படின்னு மிரட்டலா கேட்கீறீங்க…ஆனா, உறீரோயின் தன்னைக் காப்பாத்திக்க போராடுறாங்க….ஆனா அவங்களால முடியல…கடைசில…நீங்க உறீரோயினை பலாத்காரம் செய்து கெடுத்துடுறீங்க“ சீனை சொல்லி முடிக்கவும்…. டைரக்டர் வரவும் சரியாய் இருந்த து.
“ராசேந்திரா ரெடியா ? ஏம்மா உறீரோயின் ரெடியா ? ஷாட் ரெடி
டைரக்டர் சொல்ல….கேமிரா ஓடத்துவங்கியது
சொல்லி கொடுத்தபடி கனகச்சிதமாக வில்லன் நடிகர் உறீரோயினை கெடுத்து விடுகிறார்.
“சபாஷ் ராசேந்திரா….. தத்ருபமாய் நடிச்சீங்க, டைரக்டரின் பாராட்டு பத்திரத்தோடு சந்தோஷத்தில் காரில் வீடு திரும்பினார் வில்லன் நடிகரான ராசேந்திரன்.
கார் கோலிவுட்டின் மேம்பாலம் நோக்கி ஏறும்போது….மேம்பாலத்தின் ஓரமாக ஒரு சிறிய பெண்…. வயது பதினான்கு இருக்கலாம். நின்று கொண்டிருந்தாள். அவள் பாவாடை அங்காங்கே கிழிந்திருந்தன. அவளின் மேல்சட்டையில் நட்சத்திரங்களின் வடிவங்களாக அங்காங்கே பொத்தல்கள். போகிறவர்…வருகிறவர்களின் எக்ஸ்ரே பார்வைகள் படம்பிடிப்பதை பார்த்தார் வில்லன் நடிகர் ராசேந்திரன்.
“டிரைவர் வண்டியை ஓரமா நிறுத்துப்பா” என்றார்.
”பாப்பா, இங்க வா, நீ யாரு, எந்த ஊரு ” என்று விசாரித்து, எதிரில் உள்ள துணிக்கடைக்கு கூட்டி போய் நான்கு செட் பாவாடை சட்டை வாங்கி கொடுத்து, ஒரு செட் அங்கேயே மாற்ற சொல்லி…… அவளின் பழைய பாவாடை, சட்டையை வாங்கி காரில் வைக்க சொன்னார்.
இப்போது டிரைவர் கேட்டார், “அண்ணே, இப்போதான் ஸ்டுடியோவுல உறீரோயினை கற்பழிக்கிற சீன்ல கனகச்சிதமா நடிச்சதா டைரக்டர் பாராட்டுனதா சொன்னீங்க. ஆனா… நீங்களே, ஒரு ஒரு சிறிய பெண்ணோட மானத்தை காப்பாத்த டிரஸ் வாங்கி தர்றீங்க, இது முரண்பாடா இருக்கே. ஒங்க குணத்தை புரிஞ்சுக்கவே முடியலேயே என்றார் .
“டிரைவர் அண்ணே, அது தொழில் தர்மம், டைரக்டர் சொன்னபடி கனகச்சிதமா நடிச்சேன், இது மனித தர்மம், அதை செய்தேன். பெரிசா என்னப்பா செஞ்சுட்டேன் என்றார் வில்லன் நடிகர் ராசேந்திரன்.
“, என்னை மன்னிச்சுடுங்க அண்ணே, டிரைவர் வேலைக்கு நீங்க கூப்பிட்டப்ப, நீங்க நடிச்ச கேரக்டர்கள்தான் மனசுல பதிஞ்சு ஒங்கள பத்தி ஒரு தப்பு அபிப்ராயத்துல இருந்தேன். அதை நீங்க இன்னிக்கு உடைச்சுட்டீங்க” என்றார் டிரைவர்.
கவிஞர் கே. அசோகன்.