புரட்சி செய்வோம்
வெறுங்கண் அறியா ஒருசெல் உயிரும்
வாழும் நிலையினைக் காண்போம்.
துறுதுறு வெனவே சுற்றம் காத்திடும்
சுறுசுறுப் பெறும்புகள் காண்போம்.
நக்கிய நறவம் நலமுடன் சேர்த்திடும்
தூங்கா தும்பிகள் காண்போம்.
தக்கன தேர்ந்து தரணியில் இருத்திடும்
இயற்கையு மிங்கே காண்போம்.
ஒற்றை நோக்கு! ஒற்றுமை என்றும்
நற்றுணையாகி ஓம்பல் தரும்.
பிறப்பன யாவும் தனித்துவம் காக்க
புரட்சிகளிங்கே புரிந்தது புரியும்.
உறுகண் விடுத்து உறுதியாய் உழைக்கும்
உயிர்களென்றும் உச்சம் அடையும்.
இறந்திடும் வரைக்கும் இருப்பவை யெல்லாம்
ஈந்திடுதோறும்; நேயம் மலரும்.
இருட்டினை விரட்டிட கீழைக் கதிரோன்
துடிப்புடன் எழுவதும் புரட்சி.
உருவிலி காற்றும் கார்முகில் திரட்டி
பெய்யெனச் செய்வதும் புரட்சி.
அகத்திலும் வறட்சி புறத்திலும் வறட்சி
அனைத்திலும் வறட்சி தமிழ்
அகத்தை சுயத்தை காத்திட சுயநலமின்றி
சோ்ந்திடு செய்வோம்புது புரட்சி.