சொல்லும் பொருளும் 6 - இன்னாங்கு, பட்டாங்கு, பொல்லாங்கு

சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடும்; ஒரு சொல்லுக்கே பல பொருள் உண்டு. எனவே உதாரணத்திற்கு இன்னாங்கு, பட்டாங்கு, பொல்லாங்கு என்ற மூன்று சொற்களை இங்கு பார்ப்போம்.

நேரிசை வெண்பா

தளிர்மேலே நிற்பினுந் தட்டமாற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர்; - அளிநீராக்
கென்னானுஞ் செய்யார் எனைத்தானுஞ் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின். 355 நாலடியார்

பொருளுரை:

இளந்தளிரின் மேல் நின்றாலும் பிறர் தட்டினாலன்றி அதனுள் இறங்காத உளியின் இயல்பினையுடையவர் கயவர்; ஏனென்றால், பிறர்க்கு இரங்கும் இயல்புடைய சான்றோர்க்கு கயவர்கள் எந்த விதத்திலும் உதவ மாட்டார்கள்; தமக்குக் கொடுமை செய்வாரைப் பெற்றால், அவர் என்ன கட்டளை இட்டாலும் உடனடியாக வேலை செய்வர்.

இன்னாங்கு: இன்னாமை

1. Evil, hurt, injury; தீமை. இன்னாங்கு செய்வார் (நாலடி. 355)
2. Pain, remorse, suffering; துன்பம். இன்னாங் கெழுந்திருப்பார் (நாலடி. 11)
3. Aspersion, insult; harsh, cruel words; கடுஞ்சொல். ஒருவன் இன்னாங்கு உரைத்தான் (தொல். சொல். 246, உரை)

பட்டாங்கு: படு

1. Changeless, natural state; உள்ள நிலைமை. மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத் 156, உரை).
2. Truth; உண்மை. பட்டாங்கியானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36)
3. Scriptural text; சாத்திரம். பட்டாங்கி லுள்ளபடி (மூதுரை)
4. Jest, farce, waggery; specious falsehood, sophistry; மெய்போற் பேசுங் கேலிப் பேச்சு முதலியன. பட்டாங்கடிப்பதற்கும் (ஆதியூரவதானி 5)
5. Printed cloth worn by women; சித்திரவேலையமைந்த சீலை

பொல்லாங்கு: பொல்லாமை

1, Evil, vice, vileness, wickedness; தீது. பொல்லாங்கென்பவை யெல்லாந் தவிர் (கொன்றைவேந்தன்)
2. Defect, fault; குற்றம். (பிங்.) மாணவகன் பொல்லாங் குரைக்க (பெரியபு. சண்டேசுர 40)
3. Deficiency; degradation; ஈனம். (யாழ்.அக)
4. Ruin, injury, destruction; கேடு
5. Forgetfulness; மறதி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-17, 4:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 148

மேலே