பட்டாம்பூச்சி வாழ்க்கை
மகிழ்ச்சியே வாழ்க்கையாக வரம்வேண்டும்
மன்றாடியது நானல்ல - கேட்க்காதே
மண்ணுலகில் அடைந்து வருகிறேன் !
மறந்தும் அடிக்காது
மனம் நோக பேசிவிட்டாலும்
மன்றாடி சிரிக்க வைக்கும் தந்தை ,
மகள் கைகள் நீர்ப்பட்டால்
மலர் அவளை ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்று
மழையென பாசம் பொழியும் அன்னை,
வளர்ந்தேனா ? என்று சந்தேகம் நான் மட்டுமல்ல
வளர்க்கும் தாய் தந்தையே யோசனை செய்யும் வண்ணம்
வா அண்ணா என்று கைநீட்டினால்
வாரி அணைத்து சுற்றும் என் அண்ணன்
வளரும் வீடு என்றும் சொர்கமே என்றுதானே நினைக்கிறீர்கள் !
இல்லை என் உறவுகளும் வளமே
இனிமை அருள் வந்தாலே என்று
இன்றும் வரவேற்று கொண்டாடும் உறவுகள்
இந்த மடல் போதாது உறவுகள் எத்தனை என்று கூற
உடன் பிறவா உறவுகளின் அண்ணன் தங்கை ஏராளம்
உள்ளம் நிறைந்து வாழ்த்தும் உறவுகளும்
உடன்வர துடிக்கும் உறவில்லா உள்ளங்களும் பல
பார்க்கும் திசையாவிலும் பாசமும் பகிர்தலும்
பரவசம் அருள் என்று சுற்றி ஆடித்திரியும் என்னோடு
பட்டாம்பூச்சியென சுற்றித்திரியும் சிறுவர்கூட்டம்
படிப்பு முடித்து கனவை நிறைவேற்ற
பணிபுரிய பள்ளி சேர்த்தேன் ஆசிரியராக
பல மலர்கள் என்னை சுற்றி பாசத்தோடு வட்டமிட அங்கு கண்டேன்
பார்த்திடும் திசையாவும் சிரிப்போடு கட்டி அணைக்கும்
பச்சிளம்பிள்ளைகள் பள்ளி முழுதும் என் வசம் என தோன்றும்
பிள்ளைகளின் பாசத்தின் வாசத்தினால்
நட்பும் நேசமும் சூழ்ந்துள்ள இந்த வாழ்வில்
நான் மன்றாடி கேட்க என்ன உள்ளது
நான் சோகம் கண்டதில்லை என்று கூறவில்லை
நெருப்பாக நெஞ்சம் சில நேரம் வலிக்க நேர்ந்தாலும்
நீர் ஊற்றினால் அணைந்து போகும் தீ போன்று
நித்தமும் நான் கொண்டுள்ள நேசத்தின் உள்ளங்களினால்
நெஞ்சம் பூப்போல் மலர்ந்தே இருக்கிறது !
அன்பு சூழ்ந்திருந்தால் அகிலத்தில் துன்பம் பல வந்தாலும்
அரைநொடியும் முன் நிற்காது
அலையென அடித்து சென்றிடும்
ஆனந்த களிப்பாக அமைதியில் அன்பர்களின் நெஞ்சம் !
பொன்னும் தேவையில்லை பொருளும் தேவையில்லை
பாசமும் இந்த நேசமும் போதும்
பாதையில் இடியே விழுந்தாலும்
பூவென மாற்றி பொற்பாதையாக மாற்றிடுவேன்
வளர்ந்திட ஆசையில்லை
வாழ்த்தும் உள்ளங்களில் குழந்தையாகவே
வாழ யாசிக்கிறேன்
வாழ்க்கை முடிந்தாலும் வருத்தமில்லை
வானெட்டும் புகழ்பெற கனவு இல்லை
வாழ்க்கைத்துணையாவரை கைப்பிடிக்க
வாழ்த்தும் உள்ளங்கள் உடனிருக்கவே ஆசைகொள்கிறேன் !
விண்ணே நான் சென்றாலும் சொர்கம் இதுபோலாகுமா !
விதியதை வாழ்த்தாக அமைத்த என் தேவனுக்கே புகழ் !
அன்பர்கள் பல எனவே அழுகைகள் குறைவு !
நேசங்கள் பல எனவே நெருடல்கள் குறைவு !
வாழ்த்துகள் பல எனவே வசவுகள் குறைவு !
இன்பங்கள் பல எனவே இன்னல்கள் குறைவு !
இன்றும் கஷ்டங்கள்,கவலைகள் களிப்பாகவே இனித்திடுதே !
பூ பொற்பயண பாதையில் நான் ....
ச.அருள்