கண்ணுக்குள் நிலவு

கன்னக்குழியில் எனக்கு கவிதை தந்தவளே..!
நெஞ்சுக்குழியில் என்னை நித்தம் சுமப்பவளே..!

கண்களால் வீழ்த்தியே என்னை வென்றவளே..!
காதலில் என்னை மறுமுறை ஈன்றவளே..!

சமையலறையின் சாகசக்காரி நீ..!
சண்டைகளின் சமாதானத்தில்
சாமர்த்தியக்காரன் நான்..!

ஊடலின் விதையில் கூடலின் நிறைவில்
வளர்ந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது
நம் ஆசை காதல்..!

மஞ்சத்தில் மட்டுமா, என் நெஞ்சத்திலும்
ஆட்சி செய்பவளல்லவா நீ..!

கரம் பிடித்த நாள்முதலாய்
வரம் தந்தென்னை வளர்த்தாய்..!

விழிவழியாய் ஈர்த்தென்னை
வழிவழியாய் வந்தென்னை
வார்த்தெடுத்த வள்ளலும் நீயே..!

காலங்கள் கடந்தாலும்
காதல் திகட்டவில்லை நமக்கு..!
பேரன்கள் பெற்றாலும்
பேரழகி நீயெனக்கு..!

வேறுபட்ட எண்ணங்கள் இருப்பினும்
மாறுபட்டு நாம் நின்றதில்லையே..!
நம் புரிதலில் பூக்கிறது புன்னகை..!
நம் விரல்களில் வேரோடு சாய்கிறது வேதனை..!

தள்ளாடும் வயது நில்லாமல் வந்துவிட்டது
கைகள் கோர்த்தே நடக்கிறோம்
நான் தடுமாறக்கூடாதென நீயும்..!
உன்னை தாங்கிப்பிடிக்க நானும்.!

துன்பத்தில் துயிலின்றி தவித்தோம்
இன்பத்தில் இனிமையாய் கழித்தோம்
இருவருமாய் அனைத்தையும் பகிர்ந்தோம்

பருவ வயதில் பார்த்ததும் வசந்தமா..!
பாழும் வயதிலும் வாழும்
பாசத்திலல்லவா இருக்கிறது..!

சுருக்கங்கள் வந்தாலென்ன
நம் நெருக்கத்தில்
நேர்த்தியாகத்தானே தெரிகிறது..!

நினைவுகள் மெல்ல மெல்ல
புதைந்துபோய்க்கொண்டிருக்க
நின் மதிமுகம் மட்டும்
மறையவில்லையடி கண்ணே..!

கண்மூடி நான் கிடந்தாலும்
மண்ணோடு மண்ணாக புதைந்தாலும்
நீ என்னோடிருப்பாய்
கண்ணுக்குள் நிலவே..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (5-May-17, 6:32 pm)
Tanglish : kannukkul nilavu
பார்வை : 261

மேலே