இரவோவியம்

நிலவின் மீதுள்ள காதலால்
கம்பனாகும் காற்றில் மூச்செடுத்து
என் நுரையீரல் பூசிக்கிடந்தேன்...

முதலிரவுப் பெண்ணாகி
இரவோடு மறைந்தவொரு
முகிலைப் பிய்த்தெடுத்து
குளிருக்கு போர்வையிட்டேன்....

இரவுப்பனி நிதஞ்சேர்த்து
பேனா மை ஆக்கி
பேயிருளை பார்த்திருந்தேன்...

ஏனோ....

அந்தரங்க வேளையிலே
அல்லிடுக்கின் ஆழத்திலே
ஏதோவோர் தெரு நாயின்
ஆற்றாத ஓலத்திலே
விட்டில் குடித்த விளக்காய்
அணைந்தணைந்து முழித்திருந்தேன்..

சில்லென்ற மலைக்காற்றில்
துகிலுறித்த மலர்கண்டு
திரிகதை பேசிய சருகோசைகள்
மட்டும் இரவோடு உறவாடியது
கண்டு பேந்த விழித்திருந்தேன்...

தீண்டாமற் தீண்டிப்போகுந்
தென்றலின் முகவரி தேடி
என்வீட்டு ரோஜாக்களை
இரவோடு இரவாக அனுப்பிவைக்க பார்த்திருந்தேன்...
.
அந்த நிர்வாண கரையின்மீது
கடலுக்குதான் எவ்வளவு காதல்
தன்னலைகள் அனுப்பி
ஆடை சேர்க்கின்றனவே என வியந்திருந்தேன்..

தலைகவிழ் நாணல் கண்டு
நாணிக் கொண்ட பெருமாட்டிகள்
தாழடைத்து தலைதாழ்ந்தனரே...

கழனியோர கால்வாய் நண்டுகள்
காரிருளில் காதல் பேசிக்கொண்டனவே....

வானிற்கு முத்தமிட்டுச் சென்ற
நிலவின் தடங்களா இவ்விண்மீன்கள் என்று எனக்குள்ளே வினவிக்கொண்டேன்....

இரவை ரசிக்கையில்
அடடா...
ஏதேதோ புது உணர்வுகள்!!!

அந்த இளங்கோவும் இரவு குடித்திருப்பான் கண்ணகியின் ஒயிலுரைக்க.....

கண்ணகியும் இரவு நிறமாயிற்றே....

சீஸரும் இரவில்தான் பிறந்திருப்பான்
கிளியோபட்ராவின் கரம் பற்ற....

கண்ணனும் கார்மேனியனானது
இரவில் தோன்றியதாலோ....

யானும் இரவில் திளைத்து
தமிழ் குடிக்க போகிறேன்....

கவி ஈனும் எனது
பேனாமுள்ளிற்கு பிரசவம் பார்க்கப்போகிறேன்...

இரவு....

இருளிலும் ஒளிருமோர் அழகோவியம்
#####

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (6-May-17, 12:39 am)
சேர்த்தது : Sivaniraichelvi
பார்வை : 1540

மேலே