உறவே உன் பிரிவால்

உறவே உன் பிரிவால்

பெண்ணே
நீ இலா இருப்பிடமோ
நள்ளிரவு கட்டி வைத்த
காரிருள் கோட்டையாகிறதே!

கண்ணின் பார்வையோ
காணும் இடமெலாம்
வெறுமைக் கோலமிட
புள்ளிவைத்துச் செல்கிறதே!

நின் குரல் தேடும் என் செவியோ
காலவரையற்ற
கதவடைப்புச் செய்கிறதே!

வாய்மொழி வார்த்தைகளோ
அர்த்தத்தை சுமை இறக்கிவைத்து
அனிச்சையாய் ஏதோ பிதற்றுகிறதே!

கீறலுண்ட இதயமோ
பஞ்சம் பூத்த பூமி கொண்ட
பாலை விரிசல் காண்கிறதே!

நீரறியா தொண்டைக்குழியோ
எச்சிலை தேக்கிவைக்க
பெரும் பள்ளம் தோண்டப் பார்க்கிறதே!

வயிற்றுப் பள்ளமதோ
வெறும் காற்றால்
விரிந்து சுருங்கும்
பலூனாகி அதிர்கிறதே!

உன் பிரிவுத்தீயில்
தீய்ந்த மனதோ
கால்போன திசை பின்னே
அடியெடுத்துச் செல்கிறதே!

நடைமறந்த கால்களோ
உன் நினைவுப் பொதி சுமந்து
பின்னலிட்டுத் தளர்கிறதே!

உனக்காக இறுத்தி வைத்த உயிரோ
உன் இதயக் கதவுத் தட்டி
ஊசலாடிக்கொண்டிருக்கிறதே!
சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (9-May-17, 7:17 pm)
Tanglish : pirivu
பார்வை : 133

மேலே