அல்லக்கை
காலில் விழுகிறான்
அவன் கவனத்தை ஈர்க்கிறான்
பதாகைகள் வைக்கிறான்
அவன் பாதையறியாமல்
பயணம் செய்கிறான்
வெள்ளாடை உடுத்துகிறான்
வெட்கமற்று வெளிவேஷம் போடுகிறான்
எச்சையாய் அலைகிறான்
எதிலும் எச்சரிக்கை துறக்கிறான்
உண்மையை மறுக்கிறான்
நல் உடலிருந்தும் ஊனமாய் திரிகிறான்
சிலமுறை சத்தியம் செய்கிறான்
பலமுறை சாக்கடையாகிறான்
ஓசியென்றால் ஒழுக்கம் வெறுக்கிறான்
யோசியென்றால் நம்மை தூசியென்கிறான்
மீசையை முறுக்கி ஆண்மையென்கிறான்
தைரியத்தில் பெண்மையிடம் தோற்கிறான்
தலைவர் வாழ்க
தலைவி வாழ்க
அண்ணன் வாழ்க
என உரக்கச்சொல்கிறான்
மது ஒழிக
சூது ஒழிக
ஊழல் ஒழிக என உரைக்க மறுத்து
உறங்கச்செல்கிறான்
செல்போன்கொண்டு
கூட்டமாய் செல்பி எடுக்கிறான்
மண்மேல் அக்கறையிழந்து அனாதையாகிறான்
தேர்தல் வகையே அறியாமல் அரசியல் பேசுகிறான்
தேர்ந்தெடுக்க தெரியாமல் தன்மானம் இழக்கிறான்
பணம்கொடுத்தால்
பல்லக்கை சுமக்கிறான்
கூடவே பதவி கொடுத்தால்
அல்லக்கை ஆகிறான்..
'அல்லக்கைகள் இருக்கும்வரை
நல்ல கைகள் நம்மை ஆள்வது அரிது'