உருவங்கள்
===========
உள்ளங்கள் இல்லாத மனிதருக்கும்
அழகான உருவத்தை படைப்பது
கடவுளின் மோசடி
உருவங்களின் அழகினைக் கொண்டு
உள்ளத்தை தீர்மானிக்கும் கணிப்பீடுகளில்
வழுக்கி விழுந்தவர்கள்
தொலைத்த வாழ்வின் அடையாளத்தை
வாழ்வைத் தொடங்கும் மனிதர்களுக்கான
எச்சரிப்புச் சின்னமேந்தும் உருவத்துடன்
விட்டில் பூச்சிகளாக
மறுபிறவி எடுத்துக் கொள்கிறார்கள்.
பச்சோந்திகளின் உருவங்கள் பெரும்பாலும்
பதவி நாற்காலிகளில் அமர்ந்தவர்களை
காட்டுவதாயினும், காதலிலும், ஏமாற்றும்
கல்யாண வாழ்விலும் கலந்திருக்கும்
மதிப்புக்குரிய மனசுகளின் கண்ணாடியாகவும்
திகழ்கின்றன..
விலாங்கு மீனின் உருவத்தோடு
விளையாடும் சந்தர்ப்பவாதிகளுக்கு
எப்போதுமே இரண்டு முகம்.
முகங்களை மறைத்துவைத்துக்கொண்டு
முகமூடிகளோடு வாழ்ந்து விடுகின்ற
தீர்மானதாரிகளின் உண்மை உருவங்கள்
எப்போதும் மறைமுகமானதே
தூண்டில்களில் மறைந்திருக்கும்
மரணத்தின் உருவத்தை மீன்கள்
அறியாமல் மாட்டிக்கொள்வதைபோல்
நம்பிக்கைகளில் மறைந்திருக்கும்
துரோகத்தின் உருவத்தைக் காணமல்
மரணித்து விடுகின்றன சில மனங்கள்.
நிச்சயமான மரணத்தின் உருவத்தை
சுமந்து திரிகின்ற வாழ்க்கையில்
பொய்களின் உருவத்தை அணிந்த வண்ணம்
நடமாடும் மனிதர்களில் உருவமற்ற
உருவங்களாய் மறைந்துகிடக்கும்
பித்தலாட்டங்களின் உருவம் இன்னும்
வரையப்படாமலேயே பிரசித்தம் பெற்றுக்கிடக்கிறது
காட்சிப்படுத்தப்படாத காலத்தின் உருவங்கள்
உருண்டு திரண்டு உலவும் மேகத்தைப்போல
இருந்தும் இல்லாமலும் இருக்கின்றதற்கு சாட்சியாக
எல்லோர் மனசுக்குள்ளும் ஒரு அந்தரங்கம்
புதைந்து கிடக்கும்.
கண்களால் காணும் உருவங்களிலும்
காணாத உருவங்களாய் இருக்கின்ற
சூழ்ச்சிகளில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும்
ஒரு கொலைவாளின் கூர்மை.
உருவங்களை வெறும் ஓவியனின்
தூரிகையால் மட்டும் வரையப்படுவதன்று
வரையத்தெரியாதவனின் குரூர எண்ணங்களின்
முறையற்ற வெளிப்பாடுகளின் மூலமும்
வெடித்துவிடவும் செய்கின்றன.
*மெய்யன் நடராஜ்

