அம்மாக்களுக்கு
நெஞ்சு நெகிழ்ந்து மந்திரம் சொன்னா... வந்திருந்துதான் தெய்வம் மகிழும்..
ஒன்னு கொடுத்து ஒன்னு வாங்குனா... அன்பு என்னடா பண்பு என்னடா..
"தந்தாலும் தராமப் போனாலும்... தாங்கும் அவ கோவில் தான்டா"
-அம்மானா சும்மா இல்லடா
இசைஞானி தன் கர கர கம்பீரக் காந்த குரலில் பெருங்குரலில் கேட்பவரை கரைய வைத்து விடுகிறார்..
"அம்மா" - யாருக்குத்தான் அம்மாவ புடிக்காது ? பூனை, நாய்க்கு கூட தான் அம்மான்னா உசுரு னு தனுஷ் சொல்ரதுல இருக்க எதார்த்தம் எத்தனை உண்மை? தமிழ் சினிமாவில் இசைஞானி அளவிற்கு அம்மாவை ஆராதித்தவர் எவருமில்லை என்பதே உண்மை..
"பட்டியல சொல்லட்டுமா
பட்ட கடன் தீர்ந்திடுமா"
இது ஒன்றே போதும் அம்மாவின் அருமைகளைச் சொல்ல.
ஆனால் இங்கு நான் சொல்ல வந்தது அம்மாவைப் பற்றி என்றாலும் என்னை கருவில் சுமந்து பெற்ற அம்மாவைப் பற்றியல்ல.. என்னைப் பெறாத என் அம்மாக்களை.. பெற்றால்தான் பிள்ளையா???
கருவில் சுமந்தவளும் தாயே கருத்தில் சுமந்தவர்களும் தாயே
அப்படியென்றால் என்னைப் பெற்றவளைப் பற்றி சொல்ல ஏதுமில்லையோ என் எண்ணி விட வேண்டாம்.. அம்மா இந்த வார்த்தையை கேட்டாலே அல்லது நினைத்தாலே என் நினைவில் வரும் 'மீனாட்சி' அம்மா (என் நண்பனை பெற்ற என்னை பெறாத அன்னை). உண்மையிலேயே மீனாட்சி அன்னை தான் அவர். கருத்த்த்து கொஞ்சம் தடித்து எண்ணெய் வழியும் முகத்துடன் லேசா ஓரப்பார்வை பார்ப்பது போல் இருந்த அவரை எனக்கு முதல் பார்வையில் பிடித்திருக்க வாய்ப்பில்லைதான். "என்ன அண்ணன் மகனே எப்படி இருக்க என் பொண்ணத்தான் நீ கட்டனும் புரிஞ்சிதா" இப்படித்தான் மீனாட்சியம்மா எங்கிட்ட அறிமுகமானதா நியாபகம். தம்பி உன் கதைய நிறுத்து, நீ அம்மானு சொல்ர,அந்தம்மா உன்ன அண்ணன் மவனே னு சொல்லுது., அப்படினா அது உனக்கு அத்தையில்லையா னு நீங்க கேக்கலாம், அவங்க எனக்கு அத்தை முறைதான், ஆனால் என்ன செய்ய ? என் சித்தப்பா முறையுள்ள ஒருவரை கட்டிகிட்டதால அவங்க சித்தியாய்ட்டாங்க.. ஆனால் அவங்க ரெண்டு பேரும் கட்டிக்கிர முறைதான். இப்பவும் கிராமத்துப் பக்கம் போனா பாக்கலாம் , ஒரு முறைல அக்கானு சொல்ரவங்க கட்டிகிட்டு போன வழில அண்ணியா வந்து நிப்பாங்க..
சரி நம்ம விசயத்துக்கு வருவோம். மீனாட்சியம்மா ஆரம்பத்துலலாம் 'டேய் மருமவனே நீ உன் சித்தப்பன சித்தப்பானு சொல்லுவியோ இல்ல மாமானு சொல்லுவியோ அது உன் இஷ்டம், ஆனா என்னை நீ அத்தை னு தான் சொல்லனும்" னு சொன்னாலும் சரிங்க சித்தினு சொல்லிச் சிரிச்சுகுவோம். அது அப்படியேதான் போய்க்கொண்டிருந்தது பிரபாகரன் என் நண்பனாகும் வரை. மீனாட்சியம்மாவின் மகன் தான் பிரபாகரன். நட்பில் மட்டுமே சாத்தியம் மச்சான் னு பழகுறவன் அம்மா நமக்கும் அம்மா , அவன் தங்கை நமக்கும் தங்கை, மச்சானின் அப்பா நமக்கும் அப்பா.. என்ன ஒரு அருமையான பந்தம் அது.! நண்பனின் அம்மா நமக்கும் அம்மா என்பதால் அத்தை சித்தியாகி, சித்தி அம்மாவாகிப் போனார். யார் சொன்னது அம்மாக்கள் தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள் என்று? நட்பின் வழியில் பிள்ளைகள் நாங்கள் அம்மாக்களைப்பெற்றோம். என் தாயிடம் தப்பித்து தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் ஓடி விட்டாலும் மீனாட்சியம்மாவிடம் தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல. பேசிகொண்டிருக்கும் போது எப்படி கைக்கு அவ்வளவு எண்ணெய் வருமென்று தெரியாது , தலை நிறைய தேய்த்து என்பதை விட ஊத்தி விடுவார் என்றுதான் சொல்ல வேண்டும். என் முகத்தில் வழியும் எண்ணெயை தன் சேலைத்தலைப்பால் லாவகமாக துடைத்து அழகு பார்ப்பார். சாப்பிடும் போது சென்று விட்டால் சாப்புடுப்பா னு சொல்ரதுலாம் இல்ல உடனே சோற்றுருண்டை என் வாய்க்கு வந்துவிடும். என் தாயும் அப்படித்தான் , என் அம்மாவிடம் சோறு ஊட்டிக்கொள்ளாத நண்பன் ஒருவனும் இல்லை. சமயங்களில் நண்பனும் நானும் சண்டையில் கோபித்துக்கொண்டு வாரக் கணக்கில் பேசாதிருப்பது தெரிந்தாலும் எங்கள் அம்மாக்கள் எங்களை வித்தியாசமாய் பார்த்ததில்லை..
சில மாதங்கள் ஏன் வருடங்கள் எனக்கும் நண்பனுக்கும் தொடர்பில்லை என்றாலும் எங்கள் அம்மாக்களுடன் நாங்கள் பேசி, விளையாடி ஊட்டிக்கொண்டு,தலைக்கு எண்ணை தேய்த்துக்கொண்டு.. அது ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும்.
மீனாட்சியம்மாவுக்கப்புரம் நிறைய அம்மாக்கள் எனக்குண்டு , இட்லி கடை க்ளாரா' அம்மா, மெஸ் நடத்தும் நாகேஸ் அம்மா, அம்மா உணவகத்தில் பார்த்தவுடன் புன்னகைத்து ஏன்பா இவ்வளவு லேட் னு பரிவுடன் கேட்கும் கல்யாணி அம்மா , கீரை விக்கிர அம்மா, தயிர் விக்கிற அம்மாவில் இருந்து தொடர் வண்டி பயணத்தின் போது யாரயும் தொந்தரவு பண்ணாம அவர்கள் பயணத்தை தொடர்ந்தபடி அம்மா சொல்ரேன் நீ நல்லா இருப்பப்பா னு சொல்லும் பெயர் தெரியாத திருநங்கை அம்மா என ஒவ்வொருத்தருக்கும் அம்மாக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இப்படி சொல்லப்பட்ட , சொல்லப்படாத , சொல்ல மறந்த அனைதது அம்மாக்களும் நீடுழி வாழட்டும்..
"இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற''..