தாயின் அன்பு
நகரத்தில் நாளெல்லாம்
நாய்போல உழைத்திட்டு
நான்கு நாள் விடுப்பெடுத்து
நான் பிறந்த மண்ணைக் காணச்சென்றேன்.
“ஏன் மெலிந்திருக்கிறாய்...?” என்றாள்.
எதிர் பதிலாக சிரிப்பை உதிர்த்தேன்.
“சரியாக சாப்பிடுவதில்லையா...?” என்றாள்.
சமாளிப்புடன் “பசிப்பதில்லை” என்றேன்.
சாப்பிட பணமில்லை என்று,
சம்மட்டியால் அடிப்பதற்குப் பதில்
சாண் வயிற்று பசியை மறைத்திட்டேன்.....
என்னை பார்த்தாள்,
“எதற்கு என்னை ஏமாற்றுகிறாய்”
என்றது அவளின் பார்வை.
“பால், பழம், பருப்பு சாப்பிடு
பருமனாகி விடுவாய்” என்றாள் அவள் மொழியில்...
பத்தடித்தூரம் தான் நடந்திருப்பாள்
பத்துமுறை தடுமாறினாள்
பரிதவித்துப்போனேன்;
“பணம் ஐநூறை குறைத்தனுப்பு” என்று
பாசத்தோடு கட்டளையிட்டாள்.
மூன்றுவேளை இரண்டாகி போனதில்
மூச்சிரைத்தது எனக்கு
இரண்டுவேளை ஒன்றாகபோவதில்
அகமகிழ்ந்தது அவளுக்கு
உன்னைப் படைத்திட்ட இறைவனும்
பாசத்தால் பரிதவிப்பான்
என்னைப் படைத்திட்ட என் தாயே
அவனையும் என்னுடன்
நீ பெற்றெடுக்கவில்லை என்பதால்......
****************
ஜூன் 2004 ல் எழுதப்பட்டது.