குழந்தைப் பாடல்
குழந்தைகளே! எனதன்பு குழந்தைகளே!
இருள் சூழ் உலகில் ஒளிமையமான எதிர்காலம் அமைத்திட புதிய சூரியனையே நிறுவுங்களே..
இருளினுள் சூழ்ச்சி செய்யும் உலக மகா சூத்திரதாரிகளின் சூது நிறைபுத்தியை எரித்து சாம்பலாக்கி நல்லோர்களின் சோம்பல் நீக்கும் ஒளிமிகு சூரியனை நிறுவுங்களே தங்கள் மனமென்னும் பரந்த வானில்.
குழந்தைகளே! எனதன்பு குழந்தைகளே!
நீர் நிறைந்தக் கடலாய் மனதின் ஆழம் நிரம்ப, அன்பால் நிறையுங்களே எனதன்பு குழந்தைகளே..
நித்தம் நித்தம் புதிய புதிய பூக்களைப் பூக்கும் பூஞ்சோலையாய், எங்கும் அன்பென்னும் நீரால் மழை பொழிந்து,
காணும் காட்சியெல்லாம் பசுமையாய் மாற, குழந்தைகளே அன்புக்கடலாய் மாறுங்களே.
உலகம் போகும் பாதை, கற்பிக்கும் அநீதி, யாவற்றையும் அன்பைச் சாட்சியாக்கி பகுத்தறிவால் ஆராய்ந்து பாருங்களே
எனதன்பு குழந்தைகளே.
கொக்கரிக்கும் பயங்கரவாதிகளின் சிரிப்பொலியை மக்கி, ஒன்றுமில்லாதாக்கி அன்பால் நிறைந்த நல்லுள்ளங்களின் சிரிப்பொலி பரவ வழிவகை செய்யுங்களே,
எதிர்காலத் தூண்களாகிய எனதன்பு குழந்தைகளே.
காரிருளிள் மூழ்காதிருக்கட்டும் தங்கள் மனம்.
சூரிய ஒளியாய் பிரகாசிக்கட்டும் தங்கள் குணம்.
பசுமையான புது உலகம் பிறக்கட்டும் உங்களாலே...