நான் அவள்அந்த இரவு

தாம்பரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எனது செல்பேசி ஒலிக்க ஆரம்பித்தது.

“டேய்..! ரகு.. எங்கடா இருக்க..?”

“தாம்பரத்துக்கு போயிக்கிட்டு இருக்கேன்டா... என்னடா விசயம்...?”

“ஈவினிங் ரூமுக்கு வாடா...”

“ஏன்டா..! ஏதாவது பார்டியா..?”

“பார்டி பிளஸ் குட்டிடா...”

“என்னடா சொல்ற...?”

“மச்சான்..!, ஒரு குட்டி நம்மகிட்ட மாட்டியிருக்கு வேலி போட்ருக்கேன். நீ வர்றியா...?”

“ஏய்!..நிசமாவடா..?”

“உண்மதான்... நேர்ல வாடா..”

“இப்பவே வரவாடா...”

“அவசரத்த பாரு..., இப்ப வேணாம். ஈவ்னிங் 6 மணிக்கு வந்திரு...ஓகேவா..?”

“ஓகேடா..”

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. பேச்சிலராக நண்பர்களுடன் கிண்டியில் தங்கியிருக்கிறேன். எனக்கு பெண் பார்த்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த பெண்ணையும் முழுசாக தொட்டதே இல்லை. கல்லூரியில் படிக்கும்போது லவ் பண்ணியதோடு என்னுடைய காதலியிடம் ஒரே ஒரு முறை பெற்றுக்கொண்ட முத்தத்தை தவிர எந்த பெண்ணின் மூச்சுக்காற்று என் மீது பட்டதேயில்லை. கல்லூரி படிப்பு முடிந்ததும் காதலுக்கு குட்பை சொல்லிச்சென்று விட்டாள் என் அன்பு காதலி. அப்பொழுது குடித்துவிட்டு பெண்களைப் பற்றி ஏக வசனத்தில் திட்டிக்கொண்டதோடு சரி.

எனக்கு போன் செய்த நண்பன் பெயர் பாலா. அவனும் அவனுடைய நண்பர்களோடு கோயம்பேட்டில் வீடு பிடித்து தங்கியிருக்கிறார்கள். பாலாவை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவன் ஒரு ப்ளேபாய். எந்த பெண்ணையும் மடக்கிவிடக்கூடிய தைரியமும் திறமையும் அவனிடம் உண்டு என்பது அவனின் நம்பிக்கை. இரண்டு மூன்று காதலிகள் அப்படி இப்படி என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள்.

பாலாவோடு பழகியபின் தான் எனக்கும் அவ்வப்போது சபலபுத்தி எட்டிப்பார்க்கும், இருந்தாலும் ஏதோ ஒரு பயம் காரணமாக அடுத்தகட்டத்திற்குச் சென்றதேயில்லை. பாலா எனக்கு போன் பேசியதிலிருந்து எனது கவனம் எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஒரு சமயம், பாலாவிடம், ‘ஏதாவது மேட்டர்’ கிடைத்தால் சொல்லுடா, மச்சா... கல்யாணத்துக்கு முன்னாடி என்ஜாய் பண்ணனும்னு என்று’ சொல்லியிருந்தேன். அந்த கனவு நனவாகப் போகிறது. கொஞ்சம் பதட்டமாகவும்,பயமாகவும் இருந்தது. மாலை ஐந்துமணி வரை ஏதோதோ கனவுகள், ஆசைகள், பயம் என மாறிமாறி வந்தது.

சரியாக ஐந்துமணிக்கு எனது வண்டியை கோயம்பேடு நோக்கி ஒட்ட ஆரம்பித்தேன். இதோ பாலாவின் வீடு வந்துவிட்டது. இரண்டாவது மாடியில் இரண்டு ரூம்கள், பொதுவாக யாரும் மேலே வருவதில்லை.

“ வாடா...ரகு!, என்னடா 6 மணிக்கு வரச்சொன்னா...5.3௦க்கே வந்துட்ட...பயங்கர ஸ்பீடு போல...”

“ ச்..சி... அப்படியெல்லாம் இல்லடா...”

“ சரி... அதவிடு...பார்ட்டி எப்படிடா...?

“நாட்டுக்கட்ட....”

“ரியல்லி!...எப்படிடா பிக்கப்செஞ்ச...?”

“அதெல்லாம் ஐயாவோட திறமடா...”

“ வயசு என்னடா...?”

“ஏன்..? சின்னவயசு தான் பிடிக்குமோ?”

“அப்படில்ல... சும்ம தெருஞ்சுக்கதான்..”

“வயசு 27, பேரு **********, ஊரு ************* பக்கம்... எவனையோ ஒருத்தன நம்பி வீட்டவிட்டு ஓடி வந்திருச்சு..., கூட்டிவந்தவன் காரியம் முடிஞ்சதும் கலட்டி விட்டுட்டு ஓடிட்டான். இங்க பக்கத்துவுடு பழனி கிழவிகிட்ட வந்து தங்கியிருக்கு... போதும்மா...? இன்னும் வேணுமா...?”

“ம்..ம். போதும்டா...சரி..சரி.. நீ எதாவது ட்ரை பண்ணிட்டியா..?”

“மாமாவுக்கு, ஏற்கனவே நேத்தே முடிஞ்சிருச்சு... உனக்குத்தான் வெய்ட்டீங்ஸ்...”

கொஞ்சம் நேரம் பேசிவிட்டு, எனக்கும் பீர் வாங்கிக்கொடுத்தான். எனக்கு அதிலெல்லாம் இப்பொழுது விருப்பமில்லை. எனக்குள் ஏதோதோ நிகழ்வுகள் தானாகவே நடக்க ஆரம்பிக்க துவங்கியது. என் நிலைமையை பாலா புரிந்துகொண்டான் போலும், என்னை மேலே ரூமுக்கு போகுமாறு சொல்லிவிட்டு, கையில் ‘அதை’ திணித்தான்.

“கண்டிப்பா...இத யூஸ் பண்ணு..” என்று சொல்லி கண்ணடித்தான். நானும் வாங்கி பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு மேல் ரூமுக்குள் சென்றேன்.

நெஞ்சமெல்லாம் படபடக்க ஆரம்பித்தது. கொஞ்சம் டென்சனும் தொற்றிக்கொண்டது. எனக்குள்ளே நானே ‘கூல்டவுன்’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது மேலே யாரோ வரும் சப்தம் கேட்டது. அவளே தான்... என்னை நெருங்கி வராமல் கதவருகே நின்றாள்.

கறுப்பு என்றாலும் நல்ல அழகிதான், நல்ல உடல்கட்டு, வயதும் சரிதான், நல்ல கலையாகவும் இருந்தாள். எதுவும் பேசாமல் எங்கோ பார்த்துக்கொண்டே இருந்தாள். ஏதாவது கேள்வி கேட்காலம்னு நினைக்கும் போது, கதவு தட்டும் சப்தம் கேட்டது. அதிர்ச்சியுடன், திறந்து பார்த்தது, எதிரே பாலா, கையில் உணவு பொட்டலங்கள் சிலவற்றை தந்துவிட்டு 9 மணிக்கு மேலே வருவதாக கூறி சென்றுவிட்டான். மீண்டும் அவளை நோக்கி வந்தமர்ந்தேன். அவள் கையை மெதுவாக தொட முயற்சித்தேன், அவளோ வேண்டா வெறுப்பாக நெழிய ஆரம்பித்தாள்.

“ என்னாச்சு...” என்றேன்.

“ இல்ல...,பசிக்குது... நேத்து நைட்டு சாப்பிட்டது. பயங்கரமா பசிக்குது... அதான்... வயிறு... வலிக்குது....” என்றாள்.

பொட்டில் அடித்தால் போல் இருந்தது. அவளது கை நடுக்கமும் சோர்ந்திருந்த முகமும் அவள் பொய் சொல்லவில்லை என்றது.

“ ஏன்..?, காலையில, மத்தியானம் சாப்பிடல...?”

“ கையில் பத்து பைசா கூட இல்ல...”

“ நேத்து பாலா எதுவும் குடுக்கலையா...?”

“ ம்.. முடிஞ்சப்புறம் இருபது ரூபா கொடுத்தாரு, ராத்திரி சாப்பாட்டுக் சரியா இருந்தது...”

“ சரி... சாப்பிடு...” என்று சொல்லி முடிப்பதற்குள், அவள் வேகவேகமாக உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சாப்பிடுவதை பார்க்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அவள் சாப்பிடும்வரை காத்திருந்தேன். அவள் சாப்பிட்டு முடித்ததும்,

“ இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா...?” என்று கேட்டதும் பொலபொலவென கண்ணீர் பெருக்குடன் அழ ஆரம்பித்துவிட்டாள். ஒரு வழியாக அவளை சாமாதானம் செய்து என்னிடமிருந்த நானூறு ரூபாயையும் அவளிடம் கொடுத்து உடனே ஊருக்கு கிளப்பிப்போகுமாறு சொல்லிவிட்டு, கதவை திறந்து கொண்டு வெளியே வந்தேன். பாலா என்னை சந்தோசமாக வரவேற்றான். அவனிடம் எதுவுமே பேசவில்லை. அடுத்து அவன் ரூமுக்குள் நுழைய முயலும்போது,

“ இருடா...ஒரு பீர் சாப்பிட்டு அப்புறம் போ...” என்று சொல்லி திரும்ப கீழே அழைத்துவந்தேன். நானும் பாலாவும் பீர் சாப்பிட ஆரம்பித்தோம். பாலா போதையில் மயங்கி விழும்வரை அவனை கட்டாயப் படுத்திகுடிக்க வைத்தேன். அவளுக்கான வாழ்க்கையை அவளே தீர்மானித்துக் கொள்ளட்டும். மேலே ரூமில் இருக்கமாட்டாள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. எனக்குள் இருந்த குற்றவுணர்வும், பயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டேவந்தது.

***************
சிகுவரா
அக்டோபர் 2004 ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவரா (20-May-17, 1:22 pm)
சேர்த்தது : சிகுவரா
பார்வை : 653

மேலே