இருளில் பூங்கா
குயிலிசைக்க மழை
தொடர்கிறது
தவளையும்
மறையும் சூரியன்
வண்ணங்களை இழக்கிறது
கோவில் புறா
இருளும் நேரம்
பூங்காவின் இருக்கையில்
வாடிய ரோஜா
நண்பகலில் பூங்கா
புதர் விட்டு வருகின்றன
இரு நெகிழிக் குப்பிகள்
நீண்ட பாலம்
ஆற்றில் ஓடும்
வாகன வழித்தடங்கள்
வற்றிய ஆற்றை
நெருக்கி வருகின்றன
இருபுறமும் கரைகள்
பெரிய நதியில்
கரை இறங்கி வருகிறது
கட்டிடம்
நேற்றைய மழை
ஆற்றில் ஈரம் வற்றாமல்
நெகிழிப்பை
ஒரு கரும்பலகையில்
தன்னை நிரப்பி வைத்திருக்கிறது
சுண்ணாம்புக்கட்டி
அழியும் சூத்திரங்கள்
இயல்புக்கு திரும்புகிறது
கரும்பலகை
ஓயாத அலைகளின் சத்தத்தில்
மூச்சிறைக்கிறது
ஒரு புல்லாங்குழல்
நள்ளிரவெல்லாம் காத்திருந்தேன்
தூக்கம் எழுந்த விடிகாலையில்
பிறை நிலவு
கண்கூச எழுகிறேன்
சுழலும் சிறுத் துகள்களோடு
ஒளிக்கதிர்
கசக்கிய கண்களில்
முட்டைகள் இட்டுச் செல்கிறது
காற்று
சூழ்ந்த இருள்
விலகாமல் இருக்கிறது
மாடியில் வெப்பம்
எங்கும் கட்டிடம்
மெளனமாய் கிடக்கிறது
ஒரு தனித்த மரம்
நிலவை பார்க்கிறேன்
குளிர்ந்திருக்கிறது
சாளரக் கம்பிகள்
குறுக்கும் நெடுக்குமாக நடக்கிறேன்
துளியும் கண்டுகொள்ளாத
எதிர்வீட்டு மரம்
- கி. கவியரசன்