குழந்தைப்பேறு
குழந்தைப்பேறு . . .
குழந்தைபெறும் பேறு
பெறாத பாக்கியத்தால்
குழந்தைக்கு ஏங்கியவள்
குழந்தையாகிப் போகின்றேன் . .
கணம்மாறும் மனமோ இது
கணக்கிலா குழந்தைகளை
கனவிலே ஈன்றெடுத்து
முகட்டுத் தொட்டில் கட்டி
முகாரி பாடி வைக்க
இதயத்து வேதனையை
ஏக்கங்கள் தாலாட்டும் . . .
பிஞ்சு பாதங்கள்
நெஞ்சுதைக்கும் உணர்வுகளோ
இலையுதிர்ந்த மரத்தடியே
இளைப்பாறும் இதயத்தின்
வேர்த்துப் போன
எண்ணங்களின்
வேனிற்கால கனவுகளாய் . . .
அம்மா என எழும்பும்
அந்நியரின் குரலோசை
செவி கடக்க மனமின்றி
ஊற்றெடுக்கும் கண்ணீரால்
வற்றிப்போன நெஞ்சத்தை
நனைக்க மோர்ந்து வைத்த
கணநேர கானல்நீராய் . . .
பயணத்தில் சிலநேரம்
மடியமரும் இளம்பிஞ்சின்
அம்மா பாத்திரமாய்
ஆறுதலாய் இளைப்பாற
இதயத்தே இடம் தேடும்முன்
பேருந்து நிறுத்தம் வந்து
பிரியா விடை கேடக
பயணச்சீட்டிலாது
பயணிக்கும் நிழல் போல
ஏக்கத்தின் சுமை மட்டும்
நெஞ்சழுத்தும் பின்தொடர்ந்து . . .
உறவின் வாசல்களோ
பின் இழுக்கும் இதயத்தின்
காலிழுத்து அமரவைத்து
ஆயிரம் அம்பு துளைத்த
அம்புறாத் துணியாக்கி
மலடி எனும் கிரீடத்தை
வலிய தலை சூட்டி
வஞ்சனை தீர்ந்ததாய்
கதை பேசும் வாஞ்சனையாய் . . .
சோதனைக்கு உட்பட்டு
சோர்வுற்ற மூர்சிகனாய்
எண்ணிலா மருத்துவத்தின்
அகல்வாராய்ச்சிக் கூடமாய்
ஆகிப்போன உடலத்தின்
துடிக்காத சிசுவிற்கு
என்றும் . . . . . . .
துடிக்கின்ற இதயம் இது . . . . . .
சு.உமாதேவி