அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது-----------------வேதா
பூக்கள் படையுடனான இன்ப மாளிகை வீடு.
பாக்களவிழும் அமைதி ஆரோக்கியமான கூடு.
ஊக்கமுடைய ஊதுபத்தியாமறிவு நறுமணம் கமழ
கோதும் குறுந்தொகை மொழியாடுமில்லத்தில் வாழலாம்.*
அன்புப் பார்வை அங்கீகரிக்கும் நாகரீகம்.
ஆதரவு மொழியுடைய செல்லச் சுவை
இதயத்தில் தென்றல் வீசுமருமை வீட்டில்
அன்பின் மேலாண்மையுடன் ஆனந்தித்து வாழ்தலருமை.
*
தற்பெருமை பேசிப்பேசி இதயமறுக்கும் சுயநலமாய்
அற்பமாய் மூன்று வேலை செய்வதை
நற்செயலென்று பீத்தல், இதை நாள்முழுதும்
வற்புறுத்திக் கேட்க வைத்தலெத்தனை அலுப்பு!
*
இப்படியொரு மனிதருடன் காலமெல்லாம் வாழ்தல்
எப்படி அருமையாகும்! எருமையும் குடியிருக்காது.
தப்படி எடுக்கும் குடும்ப அங்கத்தவரால்
முப்பொழுதும் நாசமாகும் நிலை உருவாகும்
*
குடிகாரன் வீடு என்றும் மின்னல்
இடியுடைய சோக மழை பொழியும்
குடிலே! அறிவுக் குடை தேடியிங்கு
விடியலெனுமருமை காண புனர்வாழ்வு தேவை.
ஒழுக்கமற்ற பிள்ளைகளால் பெற்றவர் கௌரவம்
வழுகிடும், தன்மானம் வெகுவாகத் தலை குனியும்.
அழுகையே மூச்சுக் காற்றாகி சூனியமாகும்.
எழுகையற்ற இவ் வீட்டிலெருமையும் குடியிருக்காது.
*
கண்ணீராடும் நெஞ்சோடு கூட்டல் பெருக்கலற்ற
எண்ணங்களில் வசந்தமற்ற கருமை வீட்டில்
புண்ணாகும் மனதோடு வாழ்தல் கொடுமை.
வண்ணமாய் அருமையகம் தேடி வாழலாம்.
*
மயிலிறகு, குயிலினிமை பயிலுகின்ற பரமானந்தம்
துயிலாத புன்னகை துவளாத வீட்டில்
ஓயிலாக அமைய வாழ்தல் இனிமை.
வெயிலாக அருமையற்ற வீட்டுலகம் வேண்டாம்