அகநானூறு காதல்பாடல் 3

காதலியைப் பிரிந்து பொருளீட்டத் தூண்டும் நினைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான் தலைவன்.

[அ]

ஓமை மரத்தின் புறப்பகுதி முதலையின் மேல்தோல் போல் செதும்பு செதும்பாக இருக்கும். அந்த ஓமை மரத்தில் கழுகு (எருவை) கூடு கட்டிக்கொண்டு இருந்தது. அது அதற்குப் பாதுகாப்பான இடம். (கடியுடை நனந்தலை) அங்குப் பொறித்திருக்கும் வளைந்த வாயை உடைய இளங் குஞ்சுகள் வாழ்வதற்கு (அல்குவதற்கு) இரை கொண்டுவர எழுச்சி மிகு (மான்று) விருப்பம் கொண்ட கழுகு மலைப்பாறை உச்சியிலிருந்து பறந்து சென்றது.

[ஆ]

தளர்வாக நடக்கும் மரையா என்னும் காட்டாடு ஒன்றை வலப்பக்கமாக விழும்படிச் சாய்த்து அதன் சிவந்த குருதியை ஒழுகாமல் (உவற்றி) குடித்த புலவு-நாற்றம் அடிக்கும் புலி உண்ணமுடியாமல் விட்டுச்சென்ற மிகமிக முடைநாற்றம் வீசும் இறைச்சியை, கொள்ளையடிக்கும் மாந்தரைப் போலக் கவர்ந்து சென்றது. – இது அன்று தலைவன் கண்ட காட்சி.

[இ]

நெஞ்சே! சிறுசிறு இலைகளுடன் மரா மரங்கள் இருக்கும் அந்தக் காட்டின் வழியே சென்று பொருள்-செல்வம் (கலம்) கொண்டுவரும்படி என்னை மிகுதியாக (கழிய)த் தூண்டுகிறாய்.

[ஈ]

செல்லத் தூண்டும் உன் வாய்மொழி உண்மை போலத் தோன்றினாலும் அது பொய்யான மொழியே ஆகும். இனிக்கும் இவளது சிவந்த வாய் பேசும் இனிய சொற்களை எப்படி விட்டுவிட்டு உன்னுடன் வரமுடியும்? அணிகலன் பூண்டிருக்கும் என் மடந்தையின் கண்ணின் பார்வையிலிருந்து எப்படி விடுபட முடியும். காதணிகளைத் தொடும் கடைக்கண் பார்வை அல்லவா அது?




பாடல் சொல்-பிரிப்புப் பதிவு

3. பாலை

[அ]

இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன

கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்

கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,

கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,

மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை 5

வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,

[ஆ]

துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,

ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,

புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,

கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் 10

[இ]

புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,

கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,

பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்

[ஈ]

வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா

கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், 15

அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை

கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்

நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?




முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப் போய்ப், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.




எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடல்

எழுதியவர் : (24-May-17, 7:50 am)
பார்வை : 88

மேலே