வர்ணனையும் தண்டனையும்
பொலந்தைவரு மேனியோ பூவமர் ராணியோ
போதை சுரந்திடும் பூஞ்செடியோ...!
பலமதை சோதித்துப் பார்த்திட தூண்டும்
களங்காணா கன்னிகையோ – அவள்
களங்காணா கன்னிகையோ…!
அடர்வனத் தருக்களின் இடையினி லூடே
கடந்திடும் கதிரொளி போல்...
குழலியை காற்றினில் அழகுடன் நெளிகையில்
குண்டலம் மிளிர்கிறதே – காதினில்
குண்டலம் மிளிர்கிறதே…!
விண்ணில் வீணாய் மின்னுவ தென்ன
வந்திடு வெண்ணிலவே...
நுண்ணிய உருவில் நுதலினி லமர்ந்தால்
நுவலவும் படுவாயே – கவிகளில்
நுவலவும் படுவாயே…!
விரல்வெளி உச்சியில் மெல்ல முளைத்திடும்
வெண்ணிற நகநிலவை ..
விரல்களை விடுத்து வெட்டி நிலத்தில்
விதையென தூவுகின்றாய் - அங்கே
முளைக்கிறது நிலவொளிகள்....!
பெண்பால் கொண்ட அன்பால் எனக்கும்
இன்பால் இனிக்கிறதே...
அன்பால் அவள்விழி என்பால் தொடுத்த
அம்பும் தூரிகையாய் - உயிரினில்
வெண்பா வரைகிறதே...!
குகையென அகத்தினை கடைந்து குடைந்தவள்
நகைப்பினை வர்ணித்தால்...
அகப்பையும் அடியேன் முகத்தினைத் தாக்கிட
வேகமாய் வருகிறதே - மனையாள்
கோபம் சுமந்துகொண்டே...!