கண்மணியே

கண்மணியே .. . . .

உனைப்ப்ரியும்
தருணங்களில்
புலரியின் சிவப்பில்
இரைதேட
பிரியா விடை கேட்டுக்
கெஞ்சும் . .
தாய்ப்பறவையாய் . . . . .

நீ உதிர்த்த வார்த்தைகள்
எனைச்சுற்றி முளைத்த
வார்த்தை வனத்தினுள்
இன்னும் இளம்மொட்டாய்
முதிராமல் .. . .

ஈரத்தலையோடு
பாவாடைக் குடையாக்கி
நீ சுற்றித் தெறித்த
நீர்த்துளிகள்
மழைநின்ற
மாலைநேரத்து
மரநிழலாய்
மனதோரம் . . .

தொண்டை முட்டிய
வெள்ளத்திலும்
காலடி மண்ணை
பிடிதளராது
தலைநிமிர நிற்கும்
மரமாய்
உன்பிடிவாதம் . . .

உன் முதல்
கிறுக்கலை
பச்சை குத்தி
உலகின் சிறந்த
ஓவியமாய்
இன்றும் காண்கிறேன்
என் கை நடுவே . . .

உன் பிஞ்சுக் கரங்கள்
அள்ளிய சோற்றில்
மிஞ்சிய ஒற்றைப்
பருக்கை
தனித்த பசி போல
இன்றுவரை ஏனோ
பசிக்கவில்லை . . .

இல்லாத பேனுக்கு
விரல் சொடுக்கி
கொல்வாயே
இன்றும்
அந்நினைவு
இளம்பிஞ்சின்
இளவட்டத் தந்தையாய் . . .

கல்யாண மேடைதனில்
கணவனின் கைஉருவி
என்நெஞ்சில் புதைத்த
உன் ஓர் துளிக்
கண்ணீர்
வெண்ணீர் ஊற்றாகி
பீறிட்டுக் கொண்டே
இன்றுவரை . . .

உன் பிரிவின்
கனத்தை
சுமக்க இயலா
இதயத்தை
உன் நினைவுகள்
தக்கையாக்கி
மிதக்க வைக்கிறதே
கால ஓட்டத்தில் . . . .
சு.உமாதேவி

எழுதியவர் : சு உமாதேவி (26-May-17, 10:40 am)
Tanglish : kanmaniye
பார்வை : 181

மேலே