பிறந்த நாள் பரிசு

பிறந்த நாள் பரிசு
................
சுற்றிலும் கடல்..
கடல் நடுவே படகு..
படகில் அவன்…
அவனருகே அவள்..
அவர்களுக்கு நேர்மேலே முழு நிலவு...
அவளது கண் கட்டைக் கழற்றி ‘சர்ப்ரைஸ்’ என்றான் அவன்..
’அய்யோ.. முழு நிலவில் அலை அதிகம்’ என்றாள் அவள்..
அடுத்த நொடி…
படகு கவிழ்ந்தது.
அவன் எழுந்து கை மண்ணைத் தட்டிவிட்டு
மீண்டும் படுக்கைக்குச் சென்றான்.
…..
சட்டென ஏதோ தோன்ற மீண்டும் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான். “அய்யோ மணி… இன்னும் கால் மணி நேரம் தான இருக்கு” என்று வாரிச் சுருட்டி எழுந்து அரக்கப் பரக்கக் கிளம்பி “லேட்டாயிட்டா கொன்றுவாளே ராட்சசி…” என்று புலம்பிக்கொண்டே கிளம்பினான்.

“யாரடா ராட்சசிங்கிற என்னயவா?” அவனது அம்மா.

“உன்ன இல்லம்மா…பாய்ம்மா…..பாய்ப்பா….” என்றுவிட்டு பைக்கை உதைத்துக் கொண்டு கிளம்பினான்.

அவனது அம்மா “டேய்..டேய்..ஹெல்மெட்ட போட்டுட்டுப் போடா…” அதற்குள் அவன் கிளம்பிவிட..”எரும…இன்னக்கும் மறந்துட்டுப் போறான். இவனுக்கெல்லாம் பட்டாத்தான் புத்திவரும். என்று திட்டியவர், பிறகு தன்னையேத் திருத்திக் கொண்டு “கடவுளே நான் எப்பிடி என் பையன இப்டி சொன்னேன். கடவுளே அவனுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. நீதான் அவன் பைக்ல போகும்போதும் வரும்போதும் கூடவே இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டார்.

”ஆமா அவருக்கு வேற வேல இல்ல பாரு. உன் பையன் பைக்ல லிப்ட் கேட்டு உக்காந்துக்கிட்டு கூடவே போய்ட்டு கூடவே வரத்துக்கு. போய் வேலயப் பாரும்மா. அவன் என்ன சொன்னாலும் திருந்தமாட்டான்” என்று சலித்துக் கொண்டார்.

அங்கு அவன் பைக்கில் பறந்து கொண்டிருந்தான். இன்று அவனுடைய அவளுக்கு பிறந்தநாள். அவர்கள் சந்தித்து மூன்று வருடங்கள ஆகின்றன. போன இரு முறையும் பிறந்த நாளுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுக்கிறேன் என்று போய் சொதப்பியதுதான் மிச்சம். இப்போதுகூட அதைப் பற்றியே நினைத்துக் கொண்டுத் தூங்கி கனவு கூட அவளுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுப்பதுபோலவே வந்தது. ஆனால் அதுவும் சொதப்பலில்தான் முடிந்தது.
’ச்சே..இந்தக் கனவு கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா. இத அப்டியே காப்பியடிச்சு அவள அசத்தியிருப்பேனே’..என்று அவனுடைய மனம்-ஒன்று அடித்துக் கொண்டது.

‘டேய் அது ‘அபியும் நானும்’ படத்துல வர சீன்டா’ என்றது மனம்-இரண்டு.
’அதான உன் மொகரக்கட்டைக்கு இது மாதிரி ரசனயான யோசன எல்லாம் எங்கிருந்து வரும்?’ மனம்-ஒன்று..

”எனக்கு எதிரிங்க வெளியில இல்ல. கூடவே இருக்கீங்க. அடச்சீ கம்முன்னு இருங்க” என்று தன் மனத்தை அடக்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான்..
அவளுக்குப் புல்லாங்குழல் இசை மிகவும் பிடிக்கும். அதனால் இந்த முறை சிறிய அளவிலான வெள்ளியால் செய்த, கற்கள் பதித்த புல்லாங்குழலைப் பரிசளிக்கலாம் என்பது அவனது திட்டம்.
ஒரு முறை அந்தப் பரிசு இருக்கும் தன் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான்.

”அய்யய்யோ..கிப்டக் காணோம். எடுத்து வக்க மறந்துட்டேனா?’ மனம்-ஒன்று.
’எடுத்து வச்ச. ஆனா இன்னொரு பேண்ட்ல. நீ போட்டுட்டு இருக்குறது வேற பேண்ட்டுடா லூசு’-மனம்-இரண்டு.

’அய்யோ டைம் வேற ஆச்சே’….என்று நினைத்துக் கொண்டே நேராக சென்று கொண்டிருந்த பைக்கை வளைக்க முயல,..பின்னால் சுமார் ஆறு, ஏழு அடி இடைவெளியில் வந்துகொண்டிருந்த லாரிக்காரன் “டேய்..ஓரமாப் போடா..” என்று கத்த…..அவன் தன் பைக்கை ஓரங்கட்ட முயல்வதற்குள்...’சட்ட்டார்’ என்ற சத்தத்தோடு லாரி பைக்கில் மோதியது.இப்போது அவன் பைக்கை விட்டுவிட்டு மேலே பறந்தான். பறந்து லாரியின் மேல்பகுதியில் மிக வேகத்துடன் மோதி தூக்கி எறியப்பட்டான். அந்த சாலையின் ஓரத்தில் போய் ‘சொத்’தென விழுந்தான்.

அவன் தலையைச் சுற்றி ரத்தம் பரவத் தொடங்கியது. அந்த ரத்த வாசனையிலும், தரையில் மோதிய அதிர்ச்சியிலும் அவன் உடல் நடுங்கியது. ’ஹெல்மெட்டப் போட்டுட்டுப் போடா’ அம்மாவின் குரல் அவன் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.

இப்போது அவனைச் சுற்றி கூட்டம் சேரத் தொடங்கியது.
அவன் தன்னைச் சூழ்ந்திருந்த மனிதர்களைப் பார்த்து “ப்ளீஸ் யாராவது ஆம்புலன்ஸக் கூப்புடுங்க…என்னக் காப்பாத்துங்க….என்று மெல்லியக் குரலில் முணங்கிக் கொண்டிருந்தான்.

கூட்டத்தில் சிலர் “அய்யோ..பாவம்” என்றனர். ஒரு சிலர் அவனை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் அவனோடு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இன்னும் ஒருவர் ஒரு படி மேலே போய் அடிபட்டுக் கிடந்தவனையும் அந்த வேடிக்கைக் கும்பலையும் சேர்த்து போட்டோ எடுத்துவிட்டு, ‘நாடு எங்க சார் போய்ட்டு இருக்கு..ரோட்ல ஒருத்தன் அடிபட்டு உயிருக்குப் போராடிட்டு இருக்கான். சுத்தி நின்னு வேடிக்க பாக்கறதும், போட்டோ எடுக்குறதுமா இருக்காங்க…’ இந்த ரீதியில் இன்னும் ஏதோ ‘டைப்’ செய்து கொண்டே நடந்தான்.
இப்போது அடிபட்டுக் கிடந்தவனின் கண்கள் இருட்டத் தொடங்கியது. அவனைச் சுற்றி இருந்த மனிதர்கள் திடீரென்று பூனை பாசை பேசினர். சிலர் கிணற்றுக்குள் இருந்து பேசினர். வாய் வறண்டு தாகம் எடுத்தது. “தண்ணி….தண்ணி” என்று முனகினான்.

அந்தக் கூட்டத்தில் ஒருவன் மனமிறங்கி தண்ணீர் பாட்டிலை நீட்ட “யோவ்..நீ தண்ணி குடுத்து அவன் செத்துட்டான்னா அப்புறம் பிரச்சனயாயிரும்” என்று அவனை அவன் மனைவி அடக்கினாள். பிறகு அவளே “அம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ணிடலாம். அவங்க வந்து பாத்துக்கட்டும்” என்று கூறினாள்.

அடிபட்டவனிடம் இப்பொது எந்த முனகலும் இல்லை. அவன் நிறமற்ற, உணர்வற்ற, முடிவற்ற வெளியில் ஆழ்ந்து கொண்டிருந்தான்.
வழக்கமான ‘ஹார்ன்’ சத்தத்தோடு ஆம்புலன்ஸ் வந்தது. சிப்பந்திகள் அவனைத் தூக்கிக் கொண்டு வண்டியில் ஏற்றினார்கள். அப்போது அவனது சட்டைப் பையில் இருந்து சிறிய அளவிலான, அழகாக ‘பேக்’ செய்யப்பட்ட ஒரு ’கிப்ட்’ கீழே விழுந்தது.

மனோதினி

எழுதியவர் : மனோதினி (29-May-17, 6:53 pm)
சேர்த்தது : மனோதினி ஜெ
Tanglish : inba athirchi
பார்வை : 543

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே