காதல் பழக வா-20

காதல் பழக வா-20

மயங்கி விழுவதே
உன் வேலையாகி போனது
உன்னை பார்த்து நான்
மயங்கி விழுந்ததில்
கல்யாணமாலை வந்து சேர்ந்தது...


குடும்பத்தில் ஒருத்தர் விடாமல் அத்தனை பேரும் பரபரப்பாக கோவிலுக்கு கிளம்ப கண்ணனின் தந்தை மட்டும் இங்கு நடக்கும் ஒரு பிரச்சனையும் அறியாமலே வெளிநாட்டில் தொழில் சம்மந்தமான வேலைகள் முடித்த கையோடு இந்தியாவிற்கு திரும்பும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்....

கண்ணனோடு அவன் தம்பி,தங்கைகள் அடம்பிடித்து காரில் வர ராதி விட்டது பிரச்சனை என்று மற்றவர்களோடு வேனில் ஏறிக்கொண்டாள்....

மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு வேன் கோவில் இருக்கும் ஊர் எல்லைக்குள் வரவும் வேன் டயர் பஞ்சராகி நிற்கவும் சரியாக இருந்தது... மூன்று மணி நேர பயணத்தின் சோர்வில் அத்தனை பேரும் தூங்கிவிட ராதிக்கு மட்டும் வேன் நின்றவுடன் முழிப்பு வந்தது...

அசதியில் அத்தனை பேரும் சாவுகாசமாக தூக்கத்தில் இருக்க ராதி டிரைவரிடம் என்ன ஆச்சு என்று விசாரிக்க ஆரம்பித்தாள்...அப்போது தான் கண்ணன் காரை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருந்த டீ கடைக்கு சென்று வேனில் இருந்த அத்தனை பேருக்கும் டீ வாங்கிவந்து எழுப்பினான்....காலைல கிளம்பினது, இன்னும் யாரும் சாப்பிட கூட இல்லை, இந்த டீயாவது குடிங்க, கொஞ்சம் தெம்பா இருக்கலாம் என்று அத்தனை பரிவோடு எல்லாருக்கும் டீயை குடுத்த கையோடு அவன் தம்பி தங்கைகளை வேனில் இருக்க சொல்லிவிட்டு ராதியை மட்டும் காரில் தன்னோடு வருமாறு அழைக்க ராதிக்கு பகீரென்று இருந்தது...

ராதிக்கு ஒரு பக்கம் கோபம் மறுபக்கம் பயம்...அத்தனை பேருக்கும் அவ்வளவு அன்போடு பசிக்கும் என்ற பரிவோடு டீயை கொடுத்தவன் ராதிக்கு மட்டும் கொடுக்கவில்லை, ராதையின் தோழிகளுக்கு கூட எந்த பாரபட்சமும் பாராமல் பசியாற்றியவன் ராதியை மட்டும் கவனிக்காதவன் போல் நடந்து கொண்டது ராதிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, அதுவும் இல்லாமல் இவனோடு தனியாக போனால் எக்குத்தப்பாக எதாவது கலாட்டா செய்துவிடுவானோ என்ற பயமும் இருக்க ராதி கண்ணனோடு காரில் போக மாட்டேன் என அடம்பிடிக்க ஆரம்பித்தாள்...

"கண்ணன் தான் கூப்பிடறான்ல் அவனோட போமா, இங்க எவ்ளோ நேரம் ஆகும்னு தெரியல, வண்டி ரெடி ஆகி நாம அங்க போறதுக்குள்ள நல்ல நேரம் முடிஞ்சிட கூடாதுல்ல, நீயும் கண்ணனும் தான் இன்னைக்கு நேரத்துக்கு அங்க இருக்கணும், நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு அங்க நடக்கற பூஜையில் கலந்துக்கிட்டே ஆகணும், நீங்க போய் பூஜையில் கலந்துக்கோங்க நாங்க வண்டி ரெடி ஆனதும் பின்னாடியே வந்துடறோம், நீ கண்ணனோட போமா" என்று கண்ணனின் சித்தி அறிவுரை கூற ராதியால் மறக்கமுடியாமல் கண்ணனோடு காரில் செல்ல சம்மதித்தாள்...

காரில் போக போக ராதிக்கு கோபமாக வந்தது, அதற்கு முதல் காரணம் அவளின் பசி தான், தானும் தான் காலையில் இருந்து ஒன்றும் உண்ணாமல் பட்டினியாக பயணித்து கொண்டிருக்கிறோம், இந்த கண்ணனுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா என்ற கோபம் தான் அவளுக்கு அப்போதைக்கு இருந்தது....

"என்ன ராதி ஒண்ணுமே பேசாம இருக்க, நேத்து நான் அவமானப்பட்டதுல ரொம்ப சந்தோஷமா இருக்கணுமே, ஆனா இன்னும் முகத்துல அந்த சந்தோசம் தெரியலையே, உனக்கு அது பத்தலயா, இன்னும் நான் கஷ்டப்பட்டா தான் உனக்கு சிரிக்க தோணுமா"

"நீங்க அவமானப்பட்டதுக்கு நீங்க மட்டும் தான் காரணம், நான் இல்லை, உங்க மேல தப்பு வச்சிக்கிட்டு என் மேல பழி போடாதீங்க"

"ராதி என்கிட்டயே உண்மையை மறச்சி பேசறயே, நீ தான் இதுக்கு மூல காரணம்னு எனக்கு நேத்தே தெரியும், நீ தான் அந்த பொண்ண வச்சி என்ன அவமானப்படுத்த நாடகம் போட்டேனும் நல்லாவே தெரியும், அதனால உண்மையை மறைக்க நீ கஷ்டப்பட வேண்டாம்"

கண்ணனின் இந்த பதிலில் ராதி அதிர்ச்சியாகி போனாள், இவன் இவ்வளவு தெளிவாக கூற என்ன காரணம் இருக்கும், ஒருவேளை நேற்று அவனை பார்த்து சிரித்ததை வைத்து யூகித்து சொல்லலாம் என்று சமாதானம் செய்து கொண்டு அமைதியானாள்....

"என்ன ராதி அமைதியா இருக்க? உன்னோடு பேசிட்டு வர தான் உன்னை கார்ல கூட்டிட்டு வரேன், நீ என்னனா ஒரு வார்த்தைக்கு மேல பேசமாட்டேங்கறியே, இன்னும் என் மேல கோபமா?"

"உங்க மேல கோபமா, இல்லவே இல்ல,... ஆத்திரம், ஆங்காரம், ஆதங்கம்...இதை போய் கோபம்னு சாதாரணமா சொல்லிட முடியாது...உங்களுக்கே தெரியும், நீங்க எனக்கு செஞ்ச வஞ்சகம் என்னனு, அப்படி இருக்கும்போது இப்படி ஒரு கேள்வி அசட்டு தனம்னு உங்களுக்கே தெரியாதா"

"ராதி நீ கோபப்பட்டு பேசும்போது கூட மரியாதையை குடுக்க தவறல்ல,இப்படிப்பட்ட உன் கோபம் கூட அழகுதான்......ஆனா இந்த அழகை அனுபவிப்பது மட்டுமே எனக்கு போதாது ராதி, அதையும் தாண்டி....."அந்த வார்த்தையோடு முற்றுப்புள்ளி வைத்து கண்ணன் ராதியின் கண்களுக்குள் எதையோ தேட ராதியும் கண்ணனை நேருக்கு நேர் பார்த்தாள்..

கண்ணனின் அந்த வார்த்தையோடு சேர்ந்த பார்வையில் பழிவாங்கும் என்னமோ, தோற்று போனதில் வலியோ, அவமானப்பட்டதின் வேதனையோ சுத்தமாக இல்லை, முழுக்க முழுக்க ராதி மீதான காதலும், கணவன் எதிர்பார்க்கும் தாம்பத்திய தாபமும் மட்டுமே இருந்ததை பார்த்து ராதி தன் சுயநினைவு இழந்து கண்ணனின் கண்களையே பார்த்துக்கொண்டு எத்தனை நிமிடம் என்று கணக்கில்லாது ஊமையாகிப்போனாள் ....

"ராதி என்னை சைட் அடிச்சது போதும், இப்படியே நீ என்னை பார்த்துட்டு இருந்த அப்புறம் நாளைக்கு தான் கோவிலுக்கு போக வேண்டியதாகும்" என்று கண்ணன் கிண்டல் செய்த பின்னரே சுயநினைவு திரும்பி இயல்பு நிலைக்கு வந்தாள்...

"சரி இப்போ சொல்லு என் மேல இன்னும் கோபம் இருக்கா?"

ராதி முறைத்துக்கொண்டு பதில் சொல்வதற்குள் கண்ணனே முந்தி கொண்டு பேச ஆரம்பித்தான்...

"மறுபடியும் ஆத்திரம் ஆங்காரம்னு ஆரம்பிக்காத,நான் கேட்டது உனக்கு நான் டீ தராம கூட்டிட்டு வந்தேனே, அதுக்கு இன்னும் என் மேல கோபம் இருக்கானு தான்......" என்று அவன் கேட்க ராதிக்கு இன்னுமொரு ஆச்சர்யம்....

என்ன இவன் இதை இன்னுமும் நினைவில் வைத்துக்கொண்டு கேட்கிறான்,ஒருவேளை வெறுப்பேத்த நினைக்கிறானோ என்று ராதி அலட்சியமாக பதில் சொன்னாள்...

"எனக்கு டீ பிடிக்காது, சோ நீங்க டீ குடுத்தாலும் வேண்டாம்னு தான் சொல்லிருப்பேன்"

"ராதி உன்ன பத்தி முழுசா தெரிஞ்ச என்கிட்டயே பொய் சொல்ல ட்ரை பண்ணாத ராதி, நீ டீ குடிப்பனு எனக்கு தெரியும்,நான் டீ குடுப்பேன்னு எதிர்பார்த்தேனும் எனக்கு தெரியும், அது மட்டும் இல்லாம நீயும் பசியோட தான் இருக்கேனும் எனக்கு தெரியும், இருந்தாலும்"

"அதான் இவ்ளோ தெரியுதுல்ல, அப்புறம் ஏன் கண்டுக்காம கூட்டிட்டு வந்திங்க, நேத்து நான் செய்ததுக்கு இன்னைக்கு நீங்க பழிவாங்கறிங்க, அவ்ளோ தானே, இதுக்கு இப்படி பேசி விளக்கம் தர அவசியம் இல்ல, எனக்கு நல்லாவே புரியுது"

"அட அரைலூசே அதில்லடி, இன்னைக்கு பூஜை நடக்கறவரை நாம எதுவும் சாப்பிட கூடாது, வீட்ல இருக்கறவங்க நீராகாரம் எதாவது சாப்பிடலாம், ஆனா நாம தண்ணி தவிர வேறெதுவும் சாப்பிட கூடாது, அதனால தான் உனக்கு கொடுக்கல, அங்கிருந்தா எல்லாரும் சாப்பிடும்போது உனக்கு கஷ்டமா இருக்கும்னு தான் உடனே உன்ன அங்கிருந்து கூப்பிட்டு வந்தேன், எல்லாரும் வயசானவங்க, சின்ன பிள்ளைங்க, அவங்கள முழுசா பட்னி போட முடியாதில்ல, ஆனாலும் என் பொண்டாட்டி இது கூட புரியாத மடச்சாம்பிராணியா இருப்பான்னு எனக்கு தான் தெரியாம போச்சு, இத போய் பழிவாங்கற லிஸ்ட்ல சேர்த்திருக்க" என்று சொல்லிவிட்டு சிரிக்க ராதிக்கே கொஞ்சம் வெட்கமாக போய்விட்டது.... இதை கூட யோசிக்காமல் இருந்துவிட்டோமே, வீட்டில் கூட மாமா விரதம் இருப்பது பற்றி சொன்னதை மறந்துபோய்விட்டோமே என்று யோசித்து கொண்டிருக்க கண்ணன் சொடக்கு போட்டு ராதியை கூப்பிட்டான்....

" என்ன தீவிர யோசனை, நான் விளையாட்டா தான் சொன்னேன், சீரியஸா திங்க் பண்ண வேண்டாம், கோபம் மட்டுமே மனசுல வச்சிட்டு இருந்தா சின்ன சின்ன விஷயங்கள் கூட மறந்து தான் போகும், என்னை பழிவாங்கற எண்ணத்துல இருந்து வெளிய வா அப்போ எல்லாமே உனக்கு புரிய ஆரம்பிக்கும்" என்று கண்ணன் சொல்லி முடிக்கவும் கார் நிற்கவும் சரியாக இருந்தது....
ஏற்கனவே குழப்பத்தில் இருந்த ராதிக்கு அந்த இடத்தை பார்த்ததும் தலையே சுத்த ஆரம்பித்தது...இப்பொழுது தான் ராதி யோசிக்கவே ஆரம்பித்தாள், இந்த இடத்தை ஏற்கனவே பார்த்த நினைவும், கண்ணனுக்கும் இந்த இடத்திற்கும் எதுவோ சம்பந்தம் இருப்பது போல் ராதிக்குள் தோன்ற குழப்பத்தில் ராதி மயங்கி விழுந்தாள்....

எழுதியவர் : ராணிகோவிந் (29-May-17, 3:36 pm)
சேர்த்தது : ராணிகோவிந்த்
பார்வை : 462

மேலே