கண்ட நாள் முதலாய்-பகுதி-08

.............கண்ட நாள் முதலாய்...........

பகுதி : 08

இரவு அப்படியே உறங்கிப் போனவள் காலையில் அவள் அம்மா வந்து எழுப்பியதும் தான் கண்விழித்தாள்.வழமையாக 5 மணிக்கெல்லாம் எழும்பி உடற்பயிற்சி செய்பவள் நேற்றைய நிகழ்வு தந்த தாக்கத்தில் தாமதமாகவே எழுந்து கொண்டாள்..

"என்னடா உடம்பு ஏதும் சரியில்லையா,இரவு சாப்பிட எழுப்பியும் எழும்பல...காலையில எப்பவும் 5 மணிக்கெல்லாம் எழுந்திருப்ப என்னடா ஆச்சு??"

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை மா..நேத்து பீச்சுக்கு போன அலுப்பில அப்படியே தூங்கிட்டேன்"

"சரி டா...நீ போய் குளிச்சிட்டு வா...உனக்கு சூடா டீ போட்டுத் தாறன்..."

இதோ ஐந்தே நிமிசத்தில எப்படி வாறேன்னு பாருங்க..என்று சொல்லியவாறே குளியறை நோக்கி ஓடியவளை மீண்டும் அவள் அம்மாவின் குரல் நிறுத்தியது...

"துளசி இன்னைக்கு உனக்கு கல்லூரி இல்லையாடா??"

இல்லை மா...பவி லண்டன் போறதால ஒரு வாரத்துக்கு லீவு போட்டிருக்கன் என்று சொல்லும் போது தான் நேற்று இரவு பவிக்கு கோல் பண்ணாமலேயே தூங்கியது நினைவுக்கு வந்தது..

"சரி டா...பவி எப்போ போறாள்..??அவள பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு..நேத்தும் உன்னைக் கொண்டு வந்து விட்டதுமே ஓடிட்டாள்...எப்போ லண்டன் போறாளாம்.."

"நேத்து எனக்காகத் தான் மா..அவ்வளவு பிசியிலயும் பீச்சுக்கு வந்திருந்தாள்...போறதுக்கு முதல் கண்டிப்பா உங்கள எல்லாம் வந்து பார்த்திட்டு தான் போவாளாம்...இன்னும் ஒரு வாரத்தில கொழும்புக்கு கிளம்புறாள்...அப்புறம் மூனு நாளில பிளைற்..."

சரி டா....நீ போய் குளிச்சிட்டு வா...அப்பாவும் உன்கிட்ட ஏதோ முக்கியமா கதைக்கனும்னு காலையில இருந்து காத்திட்டிருக்கிறார்...சீக்கிரமா குளிச்சிட்டு வாடா..

துளசியின் அப்பா யோகேஷ்வரன் சொந்தமாக மருந்தகமொன்று வைத்து நடாத்தி வருகின்றார்...எப்போதும் அதிகாலையிலேயே கிளம்பி விடுபவர் இன்று முக்கியமாக தன்னிடம் கதைக்க வேண்டுமென காத்திருக்கிறார் என்பது அவளுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது...என்னவாக இருக்கும் என யோசித்தவாறே விரைவாக குளித்து முடித்து விட்டு வந்தவள்...உடை மாற்றி விட்டு அம்மா தந்த டீயை வாங்கிக் கொண்டு வெளி விறாந்தையில் இருந்த அப்பாவிடம் சென்றாள்..

என்றுமில்லாதவாறு அவரது முகத்தில் அளவற்ற சந்தோசம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது...அவ்வளவு சந்தோசமாக அவரை எப்போதுமே அவள் கண்டதில்லை..அவரது மகிழ்ச்சி அவளையும் தொற்றிக் கொள்ள அப்பா என அழைத்தவாறு அவர் முன்னால் போய் நின்றாள்...

அவளுக்காகவே காத்திருந்தவர் அவளை அருகே அமரச் சொல்லி அவளையே சிறிது நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.பின் அவளது கையிலிருந்த டீயைக் கண்டவர்....டீயை முதல்ல குடிம்மா என்று சொன்னார்...

இல்லை பா...நீங்க ரொம்ப நேரமா எனக்காக காத்திட்டிருக்கிறதா அம்மா சொன்னாங்க...என்ன விசயம்னு சொல்லுங்கப் பா...அதுக்கப்புறமா குடிச்சுக்கிறேன்...

"அதுக்குள்ள டீ ஆறியே போயிடும்,நீ முதல்ல குடி டா...அப்புறமா அப்பா என்னனு சொல்லுறன்..."

வழமையாக வெகு ஆறுதலாக டீயை ரசித்து ருசித்து குடிப்பவள்....இன்று ஒரே முடக்கில் குடித்துவிட்டு அப்பாவின் முகத்தை ஆவலாக நோக்கத் தொடங்கினாள்...

அவள் டீயைக் குடித்து முடித்ததும் அனைத்தையும் ஒரே மூச்சாக சொல்லி முடித்தவர், துளசியின் முகத்தினை மெதுவாக நிமிர்ந்து பார்த்தார்.அதில் வெட்கப் புன்முறுவலை எதிர்பார்த்தவருக்கு அவள் முகத்தில் சூழ்ந்திருந்த குழப்பமும் கவலையும் அவளைக் கேட்காமலேயே வாக்கு கொடுத்தது தவறோ என்று அவருக்கு தோன்றிவிட்டது...

யோகேஷ்வரனும் சங்கரனும் பால்ய வயதிலிருந்தே நண்பர்கள்...சிறு வயதிலிருந்தே ஒன்றாகப் படித்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள் வேறு வேறு துறைகளில் பயணிக்கத் தொடங்கியதும் அவர்களுக்கிடையேயான நட்பு அப்படியே இருந்தாலும் தொடர்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஒரு கட்டத்தில் அது இல்லாமலே போனது....சுமார் 20 வருடங்களின் பின் நேற்றைய
தினத்தில் எதேர்ச்சையாக சந்தித்துக் கொண்டவர்கள் மீண்டும் பழைய நினைவுகளுக்குச் சென்று சிறுவயதுக் கதைகளெல்லாம் பேசி முடித்தார்கள்....

அப்போது சங்கரன் தான் நம் நட்புக்கிடையில் இனியுமொரு இடைவெளி வேண்டாம் யோகேஷ்.நாம் நம் உறவை இன்னும் பலப்படுத்திக் கொண்டால் என்ன என்று கேட்டார்??சங்கரன் சொன்னதும் முதலில் புரியாது விழித்தவருக்கு அவர் அடுத்து சொன்ன செய்தி யோகேஷ்வரனுக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியை அளித்தது...

சங்கரன் தனது மூத்த மகனான அரவிந்துக்கு துளசியைப் பெண் கேட்டிருந்தார்.இதன் மூலம் தமது உறவை இன்னும் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னார்.யோகேஷ்வரனுக்கும் அவர் சொன்னது சரியென்றே பட்டது,அதனால் அவர் எதைப்பற்றியும் யோசிக்காமல் என் பொண்ணு துளசி உன் மகனுக்குத்தான் சங்கரன்...இதில் எந்த மாற்றமும் இல்லை என சொல்லிவிட்டார்...

அவர் அவ்வளவு உறுதியாகச் சொன்னதற்கு காரணம் துளசி மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை...அதனால் அவள் நிச்சயம் சம்மதம் சொல்வாள் எனறு எண்ணி இருந்தவருக்கு துளசியின் முகத்தில் தோன்றிய குழப்பம் அவர் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது...

சங்கரனுக்கு வாக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தவருக்கு தன் மனைவியிடம் கூட கேட்காமல் முடிவு எடுத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வுதான் முதல் எழுந்தது...ஆனால் அதுவும் கலைவாணியோடு கதைத்ததும் அவருக்கு இல்லாமல் போனது...அரவிந்தைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் சொன்னதும் கலைவாணிக்கு மிகவும் பிடித்துவிட்டது....தன் மகள் போகும் இடத்திலும் குறையாத சந்தோஷத்தோடு வாழ்வதை தான் எந்தவொரு தாயும் விரும்புவாள்....துளசிக்கு அப்படியொரு வாழ்க்கை தானாகத் தேடி வரும் போது யாருக்குத்தான் இதை மறுக்கத் தோன்றும்,கலைவாணி தன் சம்மதத்தை மனதாரச் சொன்னாள்....

அதன் பின்தான் யோகேஷ்வரனுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...ஆனால் இப்போது துளசியிருக்கும் நிலையைப் பார்த்தவருக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் காணாமல் போனது...முதல் முறையாக அவள் யாரையாவது காதலிக்கிறாளோ என்ற சந்தேகம் அவருள் எழுந்தது.காரணம் இதற்கு முன்னும் பல வரன்கள் அவளைத் தேடி வந்த போது படிப்பு முடிந்து நல்ல வேலைக்கு நான் செல்லும் வரை இதைப்பத்தி ஒன்னும் தன்னோடு கதைக்கக் கூடாதென்று தெளிவாகச் சொல்லிவிட்டாள்....அவர்களுக்கும் அது சரியென்றே பட அதன் பின் அவர்களும் இது தொடர்பில் வாய் திறப்பதில்லை...

ஆனால் இப்போது அப்படியில்லையே படித்து முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறாள்.திருமண வயதும் வந்துவிட்டது...இப்போதும் இதைப்பற்றி பேசாமலிருக்க அவரால் எப்படி முடியும்...சிறிது நேரம் இதையே யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தவர் பின் ஒரு முடிவுக்கு வந்தவராய்,அவளிடமே நேரடியாகக் கேட்டுவிட்டார்....

"உன் மனசில வேறு யாரும் இருக்காங்களா மா..?"

தனது அப்பா சொன்ன செய்தியில் குழப்பத்தின் உச்சிக்கே சென்றிருந்தவள்...அவர் கேட்ட கேள்வியில் மேலும் திகைத்து விழித்தாள்...


தொடரும்.....

எழுதியவர் : அன்புடன் சகி (2-Jun-17, 5:38 am)
பார்வை : 696

மேலே