இருளும், வெளிச்சமும்
" என்னடா இது? மழைத்துளி மண்ணில் விழுந்த உடனே கரண்ட்ஆ கட் பண்ணிடுவாங்க. இதுவே பொழப்பா போச்சு இந்த தமிழ்நாட்டு மின்சார வாரியத்திற்கு. ", என்று அலுத்துக் கொண்டிருந்த அம்மாவிடம், " பசிக்கிது அம்மா. சாதம் கொடு. ", என்று இரைஞ்சேன் நான்.
அம்மாவும், " கரண்ட் வரட்டும் டா. ", என்றிட படுக்கையில் படுத்தவனாய் உறங்கிப் போனேன் பசி மறந்தவனாய்.
ஆழ்ந்த உறக்கத்தின் நடுவிலே ஏதோ இருட்டறையில் நின்றிருந்தேன் கையில் கரடி பொம்மையுடன்.
இருளிலிருந்து அதிரும் குரலில் , " என் முன் மண்டியிடு. நானே உன்னை காப்பாற்றும் சக்தி படைத்தவன். ", என்றிட, அக்குரல் கேட்டு சற்று பயம் என்னை ஆட்கொள்ள,
துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, " யாருடா நீ? என்னை மண்டியிடச் சொல்கிறாய்! முதலில் இருள் விட்டு வெளியே வந்து வெளிச்சத்தில் வந்து உன் முகம் காட்டு. ", என்றேன் கோபமாய்.
சற்றென ஒரு கதவு திறக்க அதன் வழியாய் ஒளி உள்ளே வர, வெளிச்சம் நோக்கி சென்றேன் காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பைப் போலே.
" அங்கு செல்லாதே. அது மாயை. ", என்று மீண்டும் இருளிலிருந்து அக்குரலொலிக்க, உண்மையால் ஈர்க்கப்பட்ட இருதயம் வெளிச்சத்தை நோக்கி செல்ல, அம்மாவின் குரலென்னை எழுப்பியது...