குருவி பறந்துடுச்சு

கூரவீட்டு குடித்தனவாசி நான்
குதூகலமான வாழ்க்கை எனக்கு
கூரஇடுக்குல கூட்டுல குருவி ஒன்னு
அனுகூலமான தோழி எனக்கு
ஒத்த நாளு பாக்க முடிலேனாலும்
ஒருபருக்கை சோறும் உள்ள எறங்காது
பத்து நாளு பறந்து போனப்ப
படுத்த படுக்கையா பாழா போனேன்
தலய அசச்சு அபிநயம் காட்டுறப்ப
செலயா ஒறஞ்சு சிலுத்துட்டு ரசிப்பேன்
சின்ன கூட்டுல சுருண்டு இருக்குற அழகுக்கு
கண்ணு ரெண்டும் ஒன்ன தாண்டி போகாது
ஒழுங்கு இல்லாது பேசுற பேச்சும் கூட
வெளங்குது எனக்கு ஸ்நேகத்துக்கு சாட்சியா
ஒத்த கண்ண சிமிட்டுற பாவமும்
சோகமா கோவமான்னு சொல்லாம தெரியுது
ஏதோ காத்துல கூடு கலைஞ்சதுக்கு
என் மேல இம்புட்டு கோவம் எதுக்கு
நீ இருந்த கூட்ட இன்னொரு பறவ
நெரப்புங்கிற நெனப்பு மட்டும் வேணாம்
வெறிச்சோடி போன வீட்டுக்குள்ள - விட்டத்த
வெறிச்ச படி நகருது வெட்டிப்பய வாழ்க்க
பறவ திரும்பி வர்ற தருணம் எதிர்பாத்து
கதவை தெறந்து வச்சே காத்து கெடக்குறேன்