பதில் இல்லாத கேள்வி

சிவா என்னை பார்த்து ஏன் அந்தக் கேள்வியைக் கேட்டான் ? அத்தனை பேர் இருக்கும் போது என்னை பார்த்து ....

நினைக்க நினைக்க அழுவதா ? சிரிப்பதா? எனத் தெரியவில்லை , உங்களுக்கு தெரிய வேண்டுமெனில் 14 வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும் .

கோயம்பத்தூர் " ஜெகநாத நகர் " CIT , CMC , PSG , GRD என நான்கு கல்லூரிகள் சுற்றி இருப்பதால் , வாடகைக்கு இருப்பதும் , வாடகைக்கு விடுவதுமே பிரதான தொழில் .

போர் அடித்தால் வகுப்புக்கு போகும் எங்களுக்கு ரம்மி ஆடுவதும் , எவனையாவது மச்சான் ஹீரோ மாதிரி இருக்க என ஏற்றி விடுவதும் , காதல் என்று சொல்லி வந்தால் அவனிடம் உக்கார வைத்து தேனீர் குடித்தபடி கதை கேட்பதும் , காதல் தோல்வி என்றால் மிக உற்சாகமாகி நாலு ரவுண்ட் போன பிறகு புலம்பல்களை கேட்பதும் உப தொழில் .

இப்படி முன் மாதிரியாக இருப்பதாலோ ? என்னவோ ? நண்பர்கள் வட்டம் அதிகம் . அப்படி ஒரு பார்ட்டியில் அறிமுகமானவன் சிவா .

எதையும் அலட்டிக்கொள்ளாமல் எடுத்துக் கொள்ளும் எங்களுக்கு மருத்துவ படிப்பு படிக்கும் சிவாவும் , போதை ஏறினால் அவன் பேசும் ஆங்கிலமும் ஆச்சிரியம் . முதல் சந்திப்பின் போதும் இப்படித்தான் எங்கள் ரூமில் இருந்தவன் திடீரென்று பேச ஆரம்பித்தான் .

ஆங்கிலத்தில் செய்தி வாசிப்பதை கேட்பதை போல ஒன்றுமே தெரியவில்லை . அடிக்கடி "Kick the bucket " , "kick the bucket " என்று அவன் சொல்ல எங்களுக்கு பயங்கர கோவம் , ரூமில் இருக்கிறதே ஒரு பக்கெட் அதை ஏன்டா உடைக்கிறாய் என்று சண்டைக்கு போனோம் .

விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தவன் அதற்கு "சாவது" என்று ஒரு அர்த்தம் உள்ளது என்று சொன்னான் . புரிந்ததை போல மொத்தமாக தலையை ஆட்டி வைத்தோம் .

இப்படியாக தினமும் எங்களிடம் வந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருக்கும் அவனிடம் திடீரென்று மாற்றம்.

ஒரு பெண்ணோடு அடிக்கடி காணப்பட்டான் , என்ன என்று கேட்டதுக்கு மழுப்பலாக பதில் சொன்னான்.

எங்களுக்கு தலை வெடித்து விடும் போல இருந்தது , ஒரு காதல் கதையை கேட்க முடியாமல் போகிறதே என்று .

பேசிக்கொண்டிருக்கும் அவர்கள் எங்கள் தலை தென்பட்டால் அல்லது நங்கள் அருகில் சென்றால் மௌனமாகி விடுவார்கள் .

ஒரு மாதம் இருக்கும் , சிவா அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு மிகத் தீவிரமாக பேசி விட்டு போய் விட்டான்

இதற்கு மேலும் பொறுமையாய் இருக்க முடியாது என்று நாங்கள் அந்தப் பெண்னை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்க

உங்களுக்குத்தான் புரியவில்லை என்று அந்தப் பெண் அழுதுகொண்டு போக எங்களுக்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை .

வழக்கம் போல அன்றிரவு ரம்மி ஆட்டம் களை கட்டியது. சிவா அடுத்தடுத்து ஒரிஜினல் ரம்மியை இறக்கி விட இன்றைக்கு எப்படியும் போட்டு வாங்கி விடுவது என்ற முனைப்புடன்

மச்சி வெளியே வா என்ன பிரச்சனை சொல்லு என்று சொன்னேன் . தம் அடிக்க வெளியே வந்தோம் .

பேசிக்கொண்டிருக்கையில் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், ஒரு நல்ல பாம்பு படம் எடுப்பதை போல வந்தது அந்தக் கேள்வி

"மாமா, நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் இந்த சமூகம் ஓத்துக்கொள்ளுமா மாமா ???"

-பாவி

எழுதியவர் : பாவி (10-Jun-17, 9:17 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 523

மேலே