ஆகாயம் எரித்த சாம்பல் - நான் ரசித்த கவிதை

'ஆகாயம் எரித்த சாம்பல்!' என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை 10 Feb, 2016 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியானது.

முள்ளி வாய்க்கால் போயிருந்தேன் – அந்த
..முல்லைத் தீவையும் மோதிவந்தேன்
முள்ளில் கிழிந்தஎன் கண்களிலே – நீர்
..முட்டித் தெறித்ததை யாரறிவார்?

ஆனந்த புரத்தைக் கடக்கையிலே – என்
..ஆவி துடித்ததை என்னசொல்ல?
நானந்தத் துயரம் சொல்வதற்கு – என்
..நாபடும் பாடு கொஞ்சமல்ல

இந்த இடம்தான் அந்தஇடம் – எம்
..இலட்சம் உயிர்களைக் கொன்றஇடம்
சொந்தம் சொல்லி நானழுதால் – விண்
..சுற்றும் கோள்கள் நின்றுவிடும்

சாகாத காற்றின் சப்தங்களில் – எம்
..சனங்களின் அழுகுரல் கேட்டறிந்தேன்
ஆகாயம் எரித்த சாம்பல்துகள் – மண்ணில்
..ஆங்காங் கலைவதைக் கண்டறிந்தேன்

எரிவாய்ப் பட்ட சருகுகளாய் – உடல்
..இற்றுப் போனவர் எத்தனையோ?
நரிவாய்ப் பட்ட நண்டுகளாய் – ஈங்கு
..நசுங்கிய சிசுக்கள் எத்தனையோ?

தாயிடம் பால்கொண்ட பிள்ளையரை – ஒரு
..தடயம் இன்றியே எரித்தாராம்
ஆயிரம் எலும்புக் கூடுகளைச் – சீன
..அமிலம் ஊற்றியே அழித்தாராம்

படர்ந்து கிடக்கும் வெறுமையிலே – இனம்
..பட்ட பெருந்துயர் சிலஅறிவோம்
நடந்த மெய்க்கதை மொத்தமென்ன – ஏ
..நந்திக் கடலே நீயறிவாய்

தோண்டு மிடத்தில் தங்கம்வரும் – என்று
..சொல்லிக் களித்த ஈழத்தில்
தோண்டு மிடத்தில் குருதிவரும் – என்று
..சொல்லிப் புலம்பும் நிலையுற்றோம்

மைநீட்டிச் செய்த நிறம்படைத்த – பல
..மங்கையர் கூந்தலில் பூவுமில்லை
கைநீட்டிப் பார்த்தேன் தோழர்களே – சிலர்
..கரங் களுமில்லை கைகுலுக்க

மண்ணில் விழுந்த மழைத்துளிகள் – அவை
..மண்ணில் தொலைந்து போவதில்லை
எண்ணில் அடங்கா உயிர்த்தியாகம் – வெறும்
..இறப்புக் கணக்கில் சேர்வதில்லை

அழிந்து போனது போலிருக்கும் – ஆயின்
..அருகம் புல்லுக் கழிவேது?
பொழியும் ஒருதுளி பட்டவுடன் – அது
..பொட்டென் றெழுமே அழியாது

எந்த யுகத்தில் போர்களில்லை? – அட
..எந்த யுகத்தில் தோல்வியில்லை?
அந்த யுகத்தை எருவாக்கு – நீ
..அடுத்த யுகத்தை உருவாக்கு. - கவிப்பேரரசு வைரமுத்து

என் கருத்து:

சொல்ல வந்த கருத்தை தனித்தனி பத்திகளாக 12 பத்திகளில், பத்திக்கு நான்கு வரிகளாக, 48 வரிகளில் அமைத்திருக்கிறார்.

வரிக்கு வரி சொற்கள் கூடுதலாகவும், குறைவாகவும் மாறி மாறி இல்லை.

ஒரு பத்தியில் நான்கு வரி, ஒரு பத்தியில் ஏழு வரி, ஒரு பத்தியில் மூன்று வரி என்று மாறி மாறி வரவில்லை.

ஒவ்வொரு வரியிலும் நான்கைந்து சொற்களுக்கு மேல் இல்லை.

எங்கும் எழுத்துப் பிழைகளும், சந்திப் பிழைகளும் இல்லை.

சந்தமும் மோனையும் எதுகையும் அமைந்து சுவை கூட்டுகிறது.

வாசிக்கும்பொழுது அடுத்தடுத்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-17, 11:28 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 269

மேலே