உன்னோடு
உன்னோடு
பேசிவிடுவதென
முடிவெடுத்து
அலை பேசியை எடுக்கிறேன்
எப்படி முடியும்
பேசக் கூடாதென
உனது அலைபேசி எண்ணை நீக்கியது
நான் தானே
யாரிடமாவது கேட்டுப்
பெறலாமா யோசிக்கிறேன்
நான் பேசிக்கொண்டே இருப்பதும்
நீ மௌனமாய் கேட்டுக் கொண்டே இருப்பதும்
நினைவில் வந்து போகிறது
முரண்பாடில்லா உறவு
சாத்தியமற்றது என்பதை
உணர்கிறேன்
நம்பிரிவுக்கான
புள்ளியை உற்றுநோக்குகிறேன்
அது முற்றிலும் கரைந்து விட்டிருந்தது
நெல்லின் உமி சிறிது
நீங்கினாலும் மீண்டும் சேரமுடியுமா ?
முன்பு நீ சொன்னது நினைவுக்கு வர
மீண்டும் உறவைத் தொடர
வேண்டாம் என முடிவெடுத்து
அமைதியாகிறேன்
என் பிரியமான அப்பா.
Posted by MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்