சாக்குப்பையின் பாரம்

கலைந்த கேசத்தினூடே
கலையாத கனவுகளுடன்
வாழும் என்னை பற்றி...
நடைபாதையில் படுத்துக்கொண்டு
நடுவானில் பறப்பது போல் கனவு காணும் சிறுவன் நான்....
கிழிந்த ஆடை உடுத்தி குப்பைகளை
கிளறிக் கொண்டிருப்பவன் .... என் அழுக்கு சட்டைக்குள்
ஆயிரம் கிழிசல்களில்
ஆயிரம் வலிகள்
பொதிந்திருப்பதை
யாரறிவார்???
அப்பன் பெயர் தெரியாத நானோ
அம்மாவின் பெயரும் அறிந்திருக்கவில்லை....
அநாதையாய் நானோ
அன்பில்லாமலே வளர்கிறேன்...
மண்டப வாசலிலே
மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறேன்...
நாயுடன் போட்டியிட்டு
எச்சில் இலையை எட்டிப்பிடிக்கிறேன்...
வீணாய் போகும் உணவுகள் விதவிதமாய்
வேண்டுமென்று வேண்டுகிறேன்....
என்னை கடந்து செல்பவர்
துர்நாற்றமென்று விலகிச்செல்லும் போது
துர்மரணம் அடைந்தது
போன்ற உணர்வு எனக்குள்....
சிலநேரம் உண்பதற்கு வழியில்லாமலே
சிலர் உடமைகளை திருடுகிறேன்...
தரும அடி வாங்கிக்கொள்கிறேன்..
தருமர்கள் சிலரோ காரணமறிந்து காசினை வழங்குகின்றனர் ...
எனக்கான கல்வியை தராமலே...
புத்தகப்பையின் பாரத்தை
ஆராய்பவர்க்கு என்
சாக்குப்பையின் பாரம்
எங்கே புரிய போகிறது???
பாரத்தோடு நானும்
பாதையை கடக்கிறேன்..
எனக்கான பாதை எதுவென அறியாமலே....

எழுதியவர் : ரஜனி ஆர்த்தி . க (11-Jun-17, 12:57 pm)
சேர்த்தது : Rajani Arthi K
பார்வை : 93

மேலே