விதவையாப்போன மேகம்

விதவையாய்ப் போன வானம்

வானவள்
ஏனவள்
கட்டியிருந்த
கறுப்புத்தாவணியை
களைந்து எறிந்துவிட்டு
வெள்ளாடை அணிந்து
விதவைக் கோலம் பூண்டிருக்கிறாள்
நெற்றியில் ஜொலித்த
மின்னல் பொட்டை
நீக்கித் துடைத்து விட்டு
விரக்தியடைந்து
ஏனவள் - தலை
விரிகோலத்தில் நிற்கிறாள்
மார்பில் தொங்கிய
மழைத்துளி மாலையை
மண்ணிலேனும் வீசாமல்
விண்ணில் யாரிடம் பறி கொடுத்தாள்
கூந்தல் மேகத்தில்
கொலுவிருந்த புகார் பூக்களை
காந்தள் விரல் கதிர்கள்
கசக்கி எறிய ஏன் விட்டாள்
காக்கைச் சிறகுபோல்
கரு கரு எனவிருந்த
கோதையவள் கூந்தல்
கொக்கு நிறமானதற்கு
தக்க பதில் தாராளேன்
வானவளே
வரனிருந்தும் தான் விதவை
ஆனவளே
ஏன் எமையும் பாராமல்
போனவளே - நீ
கறுப்பாடை கட்டாவிட்டாலும்
காரியமில்லை
நிலத்தில் விரித்திருக்கும்
நெருப்பாடையின்
வேக்காட்டைக் குறைக்க
தேடி எடுத்து உன் மழை மாலையை
வாடும் உயிர்களுக்கு
வரப் பிரசாதமாய்த் தாவம்மா
அதுவே பேர் உதவியம்மா

எழுதியவர் : (15-Jun-17, 11:35 am)
சேர்த்தது : ஏஆர் பைசால்
பார்வை : 56

மேலே