தெய்வங்களுக்கும் தெய்வங்களானவர்க்கும்

============================================
ஞெகிழி அரிசி வாங்கி (ஞெகிழி –Plastic)
ஞெகிழிப் பாலூற்றி
ஞெகிழி சர்க்கரையுமிட்டு
பொங்கல் வைத்து
ஞெகிழி வாழை இலையில்
ஞெகிழியினாலேயான
வாழைப்பழமும் வைத்துப்
என் ஞெகிழி தெய்வமே உனக்கோர்
படையலிட்டேன்.
மன்னித்து ஏற்றுக்கொள்.
உடைப்பதற்கு
ஞெகிழி தேங்காயும் ஊதுவத்தியும்
இன்னும் சந்தைக்கு வரவில்லை.
(ஞெகிழி பால் - இறப்பர் பால்)

ஊர் எல்லையில் கத்தியோடு
பயமுறுத்தும் காட்டு முனியே
அரசாங்க தடை காரணமாய்
தடை பட்ட நேர்த்திக்கடனை
அடைகவில்லை என்று
தண்டித்து விடாதே ..
சற்று பொறு இன்னும் சிலகாலத்தில்
ஞெகிழி ஆடு வந்துவிடும்.

பிதுர் கடன் தீர்க்கும் நாளில்
விரதமிருந்து அன்னம் படைத்தோம்
நெகிழிச் சோறென்று அறிந்ததும்
கரைந்த நிஜக் காகங்கள்
பறந்துவிட்டன.
இன்னும் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்
இன்னும் சிலநாளில்
ஞெகிழி காகங்கள் வந்து விடலாம்.
ஆனால் சுருட்டு குடிக்கும்
என் பாட்டனே உன் படையலில்
ஞெகிழி சுருட்டுக்கு நான் எங்கே போவேன்?
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Jun-17, 4:35 am)
பார்வை : 152

மேலே