பிடித்த உணவு

பண்டிகைக்கு அவசரமா அத்தை வச்ச ஆட்டுக்கறிக் குழம்பு,
திங்கள் கிழமை காலையில அம்மா நேத்து வச்ச மீன் குழம்பு,
மனக்க மனக்க எப்போவாச்சு நாட்டுத் தக்காளி சோறு,
முழு ஆண்டு விடுமுறையில பாட்டியம்மா கடஞ்ச தொய்யக் கீரையோட சுடு சோறு,
சந்தையில வாங்கி வந்த கொல்லிக் கருவாடு கத்துரிக்கா புளிக் குழம்பு,
அம்மியில பக்குவமா ஆயா அரச்ச தேங்காக் கடலை துவையலு,
அமாவாசை கும்பிட்டு உப்புப் பருப்பும் வாழைப்பூ பொரியலும்,
புது உளுந்து ஊற வச்சு மிளகும் கூட சேத்து முறுகலா சுட்டெடுத்த உளுந்து வடை,
மழை வரும் போதெல்லாம் திடீரென அம்மா செய்யும் பருப்பு அடை,
முருங்கை கீரை கலந்து முப்பருப்பும் அரிசியும் சேந்த கார தோசை,
அடிக்கடி சுட்டெடுத்த குழிபனியாரமும் தேங்கா சட்னியும்,
வாய்க்கா வத்திடுசின்னு அம்மாச்சி பொரிச்ச குட்டி இராலு,
ஆத்துக்குள்ள வெடிப்போட்டு புடிச்ச கெண்டமீன் வறுவலு,
பெரியமனுசி ஆனதுமே ஆசையா வச்சித் தந்த உளுத்தங்கஞ்சி,
சுட்டெடுத்த வெயிலுக்கு கம்புச் சோறும் புளிச்ச மோரும்,
இப்படியே புடிச்சதெல்லாம் எழுத எழுத எட்டுப்பக்கம் நீளுதுங்க
சாப்பிட்டு ரசிச்ச நாக்குருசி போகலீங்க
தின்னே சலிப்பு வந்த மனுச பய யாருமில்ல
இன்னமும் தின்னக் குடுத்தா வேண்டாமுன்னு சொல்லும் வாயுமில்லை.

எழுதியவர் : தமிழ் ப்ரியா (19-Jun-17, 5:28 pm)
பார்வை : 164

மேலே