புதுக் கவிதை

குடை இராட்டினம் நெஞ்சில் நடைபோடுதே !

கண்ணதாசன் சான்றிதழ்ப் போட்டியாளர்


குடை இராட்டினம் நெஞ்சில் நடை போடுதே !
விடலைபோல் மனம் ஒன்றாக மறுக்கிறதே !
விடை சொல்ல வருவாயோ என் தேவி !
அடைமழையில் என் கண்ணீரை மறைக்கின்றேன் !


கடலலையின் இசையோடு கால்பதிக்க வந்தவளோ !
கரையோர மீனாகி அசைந்தாடும் பெண்ணோ !
மரங்களிலே இதயத்தை வடித்துவைத்த சிற்பியோ !
மதுரசமோ ! மாம்பழமோ ! மங்கையிவள் யாரோ !!


பாசிபடா நதிதனிலே பசுமையினைப் பதித்தவளோ !
மாசுகளைப் போக்கவந்த மாசற்ற தென்றலோ !
வீசுகின்ற காற்றினிலே விண்மீனாய் ஒளிர்பவளோ !
பூசுகின்ற மஞ்சளிலே பொன்னிறமாய் மிளிர்பவளோ !


வாசமில்லா மலர்விடுத்து வசந்தத்தைத் தருபவளோ !
பாசமிகு பந்தமிதோ பாவையிவள் பொன்மகளோ !
ஆசுகளைக் களைபவளோ ! அன்னைபோல் மனத்தவளோ !
ஈசனுக்கும் இடப்பாகம் அமர்ந்துள்ள பராசக்தியோ !!


காடுமலை கடந்துவந்த கண்ணகியின் இனத்தவளோ !
பாடுகின்ற இராகத்தில் பலர்போற்றும் இயற்கையோ !
ஏடுகளில் எடுத்தியம்ப என்னதவம் செய்தவளோ !
ஆடுகின்ற நடனத்தில் ஆண்மையினைக் கொல்பவளோ !!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (19-Jun-17, 7:05 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 132

மேலே