மந்திரப் புன்னகை
திருவாணைக்கா நோக்கிய பயணம்...கூடவே வருகிறது கவிதை !!
வேண்டித் தவம்புரிந்தான் - மிக
. வேகக் கவிதையி யற்றிடவே
நீண்ட தவம்புரிந்தான் - அவன்
. நீட்டிய நற்றவம் கண்டவளாய்
பூண்ட தவங்கலைத்து - சிறு
. புன்னகை யோடவன் கேட்டவைதாம்
ஈண்டு வழங்கவந்தாய் - அவன்
. ஈன மனங்கண்டு மாறிவிட்டாய் !
சக்தி உபாசகந்தான் - கேட்ட
. சங்கக் கவிதை பொழிதிறத்தை
அக்கறை யானவளாய் - அங்கு
. ஆழத் துயிலினில் வாழ்ந்திருந்த
பக்தன் வரதனுக்கு - வந்து
. பரிவுடன் தாம்பூல எச்சிலென
மிக்கும் வரங்கொடுத்தாய் - ஆகா
. மீண்டவன் நற்கவி ஆயினனே !
நற்றவம் செய்ததில்லை - உளம்
. நல்ல படிக்கிங்கு கொண்டதில்லை
சொற்களை வேண்டவில்லை - அருட்
. சோதனைக் கென்றும் பயந்ததில்லை
கற்க மனமுமில்லை - சொலும்
. கட்டுரை கேட்கும் வயதுமில்லை
அற்பச் சிறுவனெனை - கவி
. ஆக்கிடச் செய்தனை அம்பிகையே !
காலச் சுழற்சியிலே - நெஞ்சு
. கட்டுண்டு வாழும் மனத்தினையே
வேலை படுத்துகிறாய் - நாளும்
. வேண்டும் பதங்களை எய்தவைத்தே
கோலம் நிகழ்த்துகிறாய் - சின்னக்
. குழந்தை என்றனை நின்மடியில்
சோலை மலரெனவே - வைத்து
. சொர்க்கப் பதவி அளித்திடுவாய் !
தந்த வரத்தாலே - புவி
. தங்கிடு மென்றனைப் பற்பலவாய்த்
தொந்தர வண்டிடுமேல் - அருள்
. தோற்றிய தாலென்ன லாபமடி ?
சிந்தைக் கழிவுதரும் - புகழ்
. சின்ன மனத்தெழு மாசைகளை
மந்திரப் புன்னகையால் - உடன்
. மாற்றி யெனதுயிர் தேற்றுகவே !
-விவேக்பாரதி