வாழ்த்துகிறேன்
இரயிலில் சென்றுகொண்டிருக்கிறேன்....விழுப்புரம் அருகே வித்யாசமான காட்சி ! சூரியனின் செம்மை தரையில் விழுந்திருக்கிறது...என்றும் தெரியும் தொடுவானம் வெளுத்திருக்கிறது....மேல் வானம் மழை மேகத்தால் கருத்திருக்கிறது....இதைக் கண்டு கண்டு நெஞ்சம் கவிதை வடிக்கிறது.....
செக்கச் செவேலென்று சேர்ந்தெழில் வானத்தில்
திக்கெலாம் பூத்துத் திணறவைக்கும் காதலிலே
மிக்க மகிழ்ச்சியொடு மின்ன லிடிகக்கும்
கக்கிருள் மேகம் கவிழ்ந்து வருகிறது !
வானம் கவிதை வனைகின்ற நல்லெழில்
தானும் விரிந்து தளிராக நெஞ்சத்தே
மோன மயக்கத்தை மொய்த்துக் கிளப்பிநிற்க
நானும் வருவேனென நாடியதோ கார்மேகம் ?
மேலே கருப்பு ! மெதுவான நடுவெள்ளை !
சீலமுடன் கீழே சிவந்த வயல்வெளியில்
ஆலமரம் நின்ற அழகான காட்சியினை
மாலையிலே கண்டு மனந்துள்ளப் பாடுகிறேன் !
சூழ்ந்து பகலெல்லாம் சுட்டெரித்த சூரியந்தான்
ஆழ்ந்த துயர்வெயிலை யள்ளிக் கொடுத்திருக்க
வீழ்ந்து குமைந்து விசும்பிக் கிடந்தகணம்
வாழ்த்தவந்த மாமழையும் வாசலிலே நிற்கிறது !
விண்ணாக்கி மண்ணாக்கி விந்தை பலவாக்கி
எண்டிசையுங் காற்றாக்கி எல்லாம் படைத்தவனை
எண்ணியெண்ணித் தீராத ஏகாந்த மெய்துகிறேன்
பண்கொண்டு பாடிப் பலவாறு வாழ்த்துகிறேன் !
-விவேக்பாரதி
10/06/2017