புரட்சி இஃதே
ஒருபுறத்தில் நீரின்றி நிலமு மின்றி
. ஒடுங்குகிறார் விவசாயம் பார்த்த மக்கள்
ஒருபுறத்தில் மருந்தின்றி உதவி யின்றி
. ஓயாமல் வாடுகிறார் ஏழை மக்கள்
பெரும்நகரில் பணமென்னும் பேயைக் காட்டி
. பெற்றதெலாம் ஏமாற்றிப் பிடுங்கு கின்றார் !
ஒருசமுகம் அழுதிருக்க மற்றொன் றிங்கே
. ஓங்கிச்சி ரிக்கின்ற இழிவைக் கண்டோம் !
முயலொன்றை ஒருசிங்க மடிக்க லாகும்
. முனைந்திங்கே பலசிங்கம் நரிகள் எல்லாம்
பயந்தந்து வெருட்டுவது நியாய மோசொல்
. படுகொடுமை காட்டினிலும் இதுநே ராதே !
அயர்பவர்கள் எழுந்துவிட்டால் அச்ச மில்லை
. அவர்துணையே நமதுபடை வாடா தம்பீ
புயமுண்டு சக்தியவள் துணைதா ணுண்டு
. புயலுண்டு பெருங்கூட்ட மதன்பேர் தம்பீ !
இதுபொறுக்க லாகாதே எழுக தம்பீ !
. இனியிதுபோல் நேராம லிருக்க வேண்டின்
பொதுவான தத்தனையும் பொதுவில் வைப்போம் !
. போக்கிற்கு நமையாட்டும் புல்ல ருக்கும்
எதுகடமை என்றறிய வகைமை செய்வோம் !
. எப்போதும் எழுச்சியிலே மதியும் வேண்டும் !
புதுவிதியென் றெதுவுமிலை இருந்த ஒன்றைப்
. புதுப்பிப்போம் மீண்டும்!வா ! புரட்சி இஃதே !
-விவேக்பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
