எண்சீர் விருத்தம்

உயிர்கொல்லும் நுளம்பழித்து இளம் தளிர்களைக் காப்போம் --- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உயிர்கொல்லும் நுளம்பழித்து வாழ்வினிலே என்றும்
------ உயிரான இளந்தளிரைக் காத்திடுவோம் வாரீர்
பயிராகும் முன்னருமே கருகுகின்ற பாவம்
------- பசுந்தளிரைப் பக்குவமாய்ப் பாதுகாத்தல் வேண்டும்
கயிர்கொண்டே இழுக்கின்ற எமனிடமும் நாமும்
------ காப்பாற்ற வேண்டுமென்றே வேண்டுகின்றேன் நாளும்
உயிரெல்லாம் செத்துப்போய் இவ்வுலகில் என்றும்
------ உறவுகளும் ஒப்பாரி வைப்பரிங்கே காண்பீர் !

கொஞ்சுகின்ற பிள்ளைகளின் கதியதுவும் பாரீர்
------- கோலமயில் தாயவளின் கண்ணீரால் நாமும்
வஞ்சிக்கப் படுவதுவும் நிலைதானோ ஈங்கே
------- வரமான வாழ்க்கையுமே இல்லைதானோ நமக்கே
அஞ்சனாவின் நிலைதன்னை அறிவோமே நாமும்
------- அழுதாலும் தொழுதாலும் மீண்டிடுமா வாழ்வு
பஞ்சுபோன்ற பாலகரை இழந்தவர்கள் எல்லாம்
------- பரிதவித்தல் பார்த்திருத்தல் கூடிடுமோ சொல்வீர் !

விழிப்படைவீர் எல்லோரும் ஈங்கின்றே கண்டு
------- வியனெனவே தளிர்களையும் காப்பாற்ற ஒன்று
வழிதேடி நிலவேம்பின் சாற்றினையும் தேடி
------- வாழ்விற்குத் தந்திடுதல் முறைதானே ஓர்க.
விழியாகக் குழந்தைகளைப் பேணிடுதல் வேண்டும்
------- விலகாதும் அவர்நலனைக் காத்திடுதல் வேண்டும்
பழியில்லாச் சமுதாயச் செயலன்றோ இஃதும்
------- பக்குவத்தின் மேன்மையதைப் புரிவீரே நீங்கள் !

உதிர்கின்ற தளிர்களையும் காத்திடுவீர் சேர்ந்தே
------- உதிரத்தில் நுளம்பழித்துப் பேணிடுவீர் சேர்ந்தே
கதிராகும் காலத்தில் பயிர்காத்தல் நன்றாம்
------- கடமையென்றே எண்ணுதலும் அறிவீரே திண்ணம்
மதியிழந்து தவிக்காதீர் மண்ணுலகில் என்றும்
------- மரணங்கள் நோய்நொடியால் வேண்டாமே என்றும்
விதியெனவே எண்ணாதீர் மானிடரே நீங்கள்
------- விரைந்திடுவீர் எல்லோரும் நலன்நோக்கி வாழ்க !


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jun-17, 9:56 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 81

மேலே