மிலாவும் மின்மினி பூச்சி கனவுகளும் -2 -மாம்பழ தேவதை

மிலா பள்ளி விட்டு வந்ததுமே அம்மா மாம்பழம் வேண்டுமம்மா என்றாள். வீட்டில் இல்லையே அப்பாவை வாங்கி வர சொல்லலாம் என்றாள். இப்பவே வேணுமே என்றாள். என்ன அவசரம் என்று கேட்டதற்கு அவள் சொன்னாள் அம்மா இன்று புது பாட்டு சொல்லி தந்தார்கள் தமிழ் டீச்சர். என்ன பாட்டு ட என்று அம்மா கேட்க மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் என்று பாட தொடங்கினாள் மிலா,.

செல்ல மகளின் பாட்டை ரசித்த அம்மா புரிந்து கொண்டாள் குழந்தை பாட்டு கேட்டதால் மாம்பழம் சாப்பிட ஆசை கொண்டது என. ஓஹோ இது தானா விஷயம் என்றவள் கணவனுக்கு தொலைபேசியில் அழைத்து பிள்ளை கேட்கிறாள் வரும்போது மாம்பழம் வாங்கி வாருங்கள் என்று சொல்ல அழைத்தாள். பொறுமை இல்ல மிலா தொலைபேசியை பிடுங்கி அப்பா வரப்ப மாம்பழம் வாங்கிட்டு வாப்பா என்றாள்.

இப்படி செல்லம் கொஞ்சும் மகளின் வேண்டுதலை எப்படி தந்தையால் மறக்க முடியும். வரும்போது மாம்பழ பையோடயே வந்தார். மிலா, ஆசையாக தொட்டு பார்த்து வைத்தாள். வாசனை முகர்ந்தாள்.
வெட்டி தா மா என தொண தொணக்க தொடங்கினாள்.அம்மாவும் கொஞ்சம் பொறு வேலைய முடிச்சிட்டு வரேன் என இரவு உணவுக்கு பின் வெட்டி கொடுத்தபோது அருகில் காத்திருந்து அவள் அதை சுவைத்த போது அவள் எதையோ சாதித்ததை போல உணர்ந்தாள்.

மாம்பழ சாரின் சுவை நாக்கில் ஒட்டி கிடக்க நாளை பள்ளி தோழியிடம் சொல்ல வேண்டும் மாம்பழம் சாப்பிடனே என்று நினைத்தாள். நம் வீட்டிலே மாம்பழ செடி வளர்ப்போம் அம்மா என்றாள். கொட்டையை வேறு பத்திர படுத்தினாள். இந்த சுவையில் நம் வீட்டில் மாமரம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தபடியே உறங்கிப்போனாள்.

மிலாவின் மின்மினி பூச்சி போன்ற கனவுகளின் உலகம் மெல்ல சிறகு விரித்து பறக்க தொடங்கியது. மிலா, மெல்ல நடந்து செல்கிறாள் . காய வாய்த்த மாங்காய் கொட்டையை மெல்ல தடவுகிறாள். அது ஈரம் இன்னும் முழுதும் காயவில்லை . அதன் ஒவொரு நார்களாக ஒரு பொம்மையையை தடவுவது போல மெல்ல தடவி கொடுக்கிறாள் .அதன் உச்சி நாரை தடவும் போது ஒரு மெல்லிய அழகிய வெளிச்சத்தை கண்டாள்.

அவள் நிச்சயம் தேவதையாக தான் இருக்க வேண்டும் என நினைத்தாள். அவள் அவ்வளவு அழகாக இருந்தாள். அவள் ஒரு அழகிய பெண்ணை போல இருந்தாள். கொஞ்சம் ஒரு மாம்பழத்தை போல இருந்தாள். அவளுக்கு கால்கள் இல்லை மர காம்புகளே இருந்தது . கைகள் இல்லை இலைகளே இருந்தது . முகம் மட்டும் அழகிய பெண்ணை போல இருந்தது.

மிலா, கண் சிமிட்டாமல் மாம்பழ தேவதையை ரசித்து கொண்டிருந்தாள். தேவதை பேச ஆரம்பித்தது. மிலா, என்றது. மிலா, ஆச்சிரியத்தோட என் பெயர் எப்படி தெரியும் என்றாள். எனக்கு தெரியும் உன் அம்மா உன்னை செல்லமாய் அழைத்ததை கேட்டு கொண்டு தானே இருந்தேன் என்றாள்.

தேவதை சொன்னாள் உன் மேல் கோபமாய் இருந்தேன். அப்படியா என்றாள் மிலா, கொஞ்சம் பயத்தோடு. ம் நீ தானே என்னை வெட்டும்படி ஓயாமல் கூறிக்கொண்டு இருந்தாயே அதனால் தான் கோபம் கொன்டேன். பின் நீ என்னை செடியாக வளர்க்க ஆசைப்பட்டதை கேட்டதும் என் கோபம் கரைந்து போனது என்று சொல்லி சிரித்தாள் தேவதை.

பிறகென்ன இப்போது எல்லாரும் என்னை சாப்பிட்டு விட்டு கொட்டையை குப்பையில் வீசி விடுகிறார்கள். நான் மறுபடி செடி ஆகாவிட்டால் இறந்து தானே போவேன்.என்னை போன்ற மாம்பழ தேவதைகள் கோடையின் சூட்டை தணிக்கவே வருகிறோம் உங்களுக்காக. நீங்கள் எங்கள் கொட்டைகளை மண்ணுக்குள் அனுப்பா விட்டால் அடுத்த கோடையில் உங்களை எங்களால் பார்க்க முடியாது.அதனால் தான் கோபமும் வருத்தமும். நீ பாசமாய் என் தலையை கோதியதால் உன்னை சந்திக்க வெளியே வந்தேன் என்றது . தேவதை மேலான பயம் போய் மிலாவும் சிரித்தாள் குட்டி தேவதையாய்.

அழகிய சிரிப்பின் சொந்தக்கார குட்டி பெண்னே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது மாம்பழ தேவதை, குழந்தையோ மழலை மனசோடு எனக்கு இரவு சாப்பிட்டது போல அதே சுவையில் ஐந்து மாம்பழங்கள் தருவாயா என்று ஆசையோடு கேட்டது.

சிரித்தபடியே தேவதை அதே அற்புத சுவை வேண்டும் என்பது உனது ஆசை என்றால் நான் வளர்ந்த தோட்டத்துக்கே உன்னை அழைத்து செல்கிறேன். நீ ஐந்து அல்ல ஐம்பது வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள் என்றது. உன் தோட்டம் கிட்டயா தூரமா? என்று கேட்டாள் மிலா. அது தூரம் தான் ஆனால் உன்னை சிரமம் இல்லாமல் நான் அழைத்து செல்வேன். நீ என் மாவிலை கைகளில் ஏறிக்கொள்ள வேண்டும் அவ்வளவு தான் என்றது தேவதை.

கொஞ்சம் பயந்த மிலா, மாம்பழம் சாப்பிடும் ஆசையில் மாவிலையை இறுக்க பிடித்து அமர்ந்துகொண்டாள், பறக்க தொடங்கியது தேவதை. நிலவின் வெளிச்சத்தில் எங்கோ போய் கொண்டிருந்தனர் இருவரும் பல மரங்களை தாண்டி . இறுதியில் ஒரு வெளி வாசலில் பூ போல மிலாவை இறக்கி விட்டு சிரித்தது தேவதை.

அந்த நிலவொளியில் அத்தனை மரங்களும் அழகு என்றால் அதில் தொங்கிய மாங்கனிகள் அழகிய அசைவில் மிலா, மயங்கி தான் போனாள். கூடவே வந்த மாம்பழ வாசனை தோட்டத்தை நிரப்பி அந்த இடத்தையே அழகாக்கியது. தேவதை மிலாவை மெதுவாய் கைபிடித்து அழகாய் கூட்டி சென்றது. ஆச்சரியத்தோடயே எல்லாவற்றையும் பார்த்தபடி மிலா, ரசித்தாள் .

தோட்டத்தின் நடுவில் இருந்த தாய் மரத்தின் அருகில் சென்றதும் மாம்பழ தேவதை அந்த மரத்தை கட்டி கொண்டு ஏதேதோ பேசினாள். அந்த மாம்பழ சம்பாஷணை அவளுக்கு புரியவில்லை ஏனோ. ஆனால் தேவதை அவள் அம்மாவை முத்தமிடுகிறாள் என்பதை மட்டும் மிலாவால் புரிந்து கொள்ள முடிகிறது.

தேவதை ஒரு அழகிய மாம்பழத்தை பறித்து மிலாவிடம் குடுத்து சுவைக்க சொன்னது . அதே சுவையா என்று கேட்டது. மிலா ம் அம்மா தந்ததை போல இதுவும் சுவையோ சுவை என்றது.பின் தேவதை அவளை முதுகில் ஏற்றி விரும்பும் பழங்களை எல்லாம் பறித்து கொள்ள சொன்னது.ஆசை தீர மாம்பழங்களை சுவைத்து தீர்த்தாள் மிலா,.

எதற்கு என்று தெரியாமல் தன்னையும் அறியாமல் மிலாவும் அந்த மாமரத்தை நேசத்தோடு முத்தமிட்டு விடைகொடுத்தாள்.கூடவே அவள் பாஷையில் எதோ பேசவும் செய்தாள் அந்த மரத்திடம்.
பின் அந்த மாம்பழ தேவதையின் இலைகளில் ஏறி வீடு நோக்கி பறக்க தொடங்கினர் மிலாவும் கூடவே ஒரு கூடை நிறைய மாம்பழங்களும். அத்தனை மாம்பழங்களையும் சாப்பிட்டு கொட்டைகளை நட்டு நாமும் இது போல தோட்டம் உருவாக்க வேண்டும் என்று ஆசையோடு நினைத்தபடியே கூடையை பார்த்து கொண்டிருந்தாள் மிலா,.

பின் குறிப்பு:
என் எழுத்து உங்களோடு ஏதாவது பேசியிருந்தால் நீங்கள் என்னோடு பேசுங்கள்(கமெண்ட்).
இனி மாம்பழங்களை சுவைத்து கொட்டையை வீசி எரியும் போது இந்த மாம்பழ தேவதை உங்கள் எதிரில் வருவாள் நினைவாக என்ற நம்பிக்கையில்.. யாழினி வளன்

எழுதியவர் : யாழினி valan (22-Jun-17, 9:21 am)
பார்வை : 473

மேலே