கண்ட நாள் முதலாய்-பகுதி-11
![](https://eluthu.com/images/loading.gif)
........கண்ட நாள் முதலாய்.......
பகுதி : 11
சிறிது நேரத் தூக்கத்தின் பின் விழித்துக் கொண்ட துளசி குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவி விட்டு வந்தாள்.டயரியை எடுத்து அதன் பக்கங்களை புரட்டியவள் நேற்றைய இரவில் எழுதிய கவிதை கண்ணில் பட அதையே சிறிது நேரம் பார்த்தவாறு இருந்தவள்,அன்றைய நாளிற்கான பக்கத்திலிருந்து தனது மனதில் இருந்த அனைத்தையும் எழுதி முடித்தாள்..இறுதியாக கவிதையொன்றை எழுதி முற்றுப்புள்ளி வைத்தவள் அத்தோடு அவளது காதல் அத்தியாயத்திற்கும் சேர்த்தே முற்றுப்புள்ளியை வைத்துக் கொண்டாள்...
இறுதியிலிருந்த அனைத்துப் பக்கங்களையும் அவளது கண்ணீர் அணைத்துக் கொள்ள,மனதிலிருந்த அனைத்தையும் அந்த டயரிக்குள்ளேயே இறக்கி வைத்தவள் மீண்டும் முகத்தை கழுவி விட்டு வெளியிலிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள்...அவள் சந்தோசமாக இருந்தாலும் சரி சோகமாக இருந்தாலும் சரி அவள் அன்னை மடியை விட அதிகம் தேடுவது ஊஞ்சலைத்தான்...அதில் சாய்ந்து இருந்தாவாறே அப்பாவின் வருகைக்காய் காத்திருக்கத் தொடங்கினாள்...
அப்போது அங்கே வந்த சுசி அவளை வம்பிழுக்கத் தொடங்கினாள்..."என்ன துளசி மேடம் உங்களை இப்ப எல்லாம் பார்க்க கூட முடியல,ரொம்ப பிசி ஆகிட்டீங்க போல.."
"நானா நீயா??நீ தான் கிளாஸ் கிளாஸ்னு ஓடிட்டே இருக்காய்...இதில நான் பிசியாம்...போய் படிக்கிற வேலையை பாருடி..போ.."
"அட பார்ரா...நான் உன்னைச் சொன்னா...நீ பிளேட்டையே மாத்தி போடுறியா??உனக்கென்ன நீ பாட்டுக்கு லீவை போட்டிட்டு பார்க்கு பீச்சுன்னு சுத்திட்டிருக்காய்...நானு இங்க புத்தகமும் கையுமா அலைஞ்சிட்டு இருக்கேன்..."
"எக்ஸாம் முடிஞ்சதும் உனக்கும் ஜாலிதானே...அப்புறம் எதுக்குடி இப்படி சலிச்சுக்குற...சரி அதை விடு..உன் படிப்பெல்லாம் எப்படிப் போகுது,எக்ஸாமுக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டியோ??"
"அதெல்லாம் பக்கா...இன்னைக்கு எக்ஸாம் வச்சாக்கூட தூள் கிளப்பிடுவேன்..."
"அதானே நீ என் தங்கச்சி ஆச்சே...என் அறிவில பாதியாவது உனக்கு இருக்கத்தானே வேணும்"
"ம்க்கும்..ஆனாலும் உனக்கு இவ்வளவு பெருமை ஆகாது...சரி நீ உன்னோட டிரீம்ஸை கண்டினியூ பண்ணு...நான் போய் என் வேலையைப் பார்க்கிறேன்.."
"அப்பாடா..,இப்போவாவது படிக்கக் கிளம்பினியே..."
"ஹேய்...யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிப்போட்டாய்,நான் வேலைனு சொன்னது என்னோட புல்டைம் ஜொப்பை.."
"அது என்னடி,உன்னோட புல்டைம்ஜொப்??"
வேற என்ன சாப்பிடுறதுதான்..என்று இளித்துக் கொண்டே உள்ளே ஓடிவிட்டாள் சுசி..அதுவரை நேரமும் விலகிப்போன சோகம் மீண்டூம் துளசியை வந்து கட்டிக் கொள்ள பவிக்கு அழைப்பினை ஏற்படுத்தினாள்...
"வணக்கம்...நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்போது நித்திரை உலகத்தில் பிசியாக இருப்பதால் சிறிது நேரத்தின் பின் தொடர்பினை ஏற்படுத்தவும்..."
"நீ என்கிட்ட அடிதான்டி வாங்கப் போறாய்...இப்போ உனக்கு என்கூட கதைக்கிறத விட நித்திரைதான் முக்கியமாடி...??"
"அதிலென்ன சந்தேகம் உனக்கு,உன் கோலை அட்டென்ட் பண்ணதே பெரிய விசயம்...கொஞ்ச நேரத்தில நானே எடுக்கிறன்...இப்போ நீ என்ன சொன்னாலும் என் காது கேட்காது....கண்ணுக்குள்ள அவ்வளவு நித்திரை எனக்காக காத்துக்கிடக்கு...அதனால இப்போ உனக்கு பாய் பாய் என்றவாறே போனைக் கட் செய்துவிட்டாள் பவி..."
சரியான தூங்குமூஞ்சி என்று பவியைத் திட்டியவாறே நிமிர்ந்தவள் வாசலில் அப்பா வருவதைக் கண்டதும் அவரோடு கதைப்பதற்குத் தயாரானாள்...அப்பா...உங்க கூட கொஞ்சம் கதைக்கனும்,நேற்று நீங்க சொன்ன என் கல்யாணம் சம்மந்தமா என்று சொல்லி அவரை நிறுத்தியவள், தொண்டைக்குள் அழுகை சிக்கிக் கொண்டிருக்க அது வெடித்து வெளிவரும் முன்னே "நான் யோசிச்சு பார்த்தேன் பா....எனக்கு சம்மதம்...ஆனால் என்னோட படிப்புக்கும் வேலைக்கும் எந்த இடையூறும் வரக்கூடாது....அதை முதலே பேசிடுங்க என்று அழுகையைக் அடக்கிக் கொண்டு ஒருவழியாக சொல்லி முடித்தாள்...
இதைக் கேட்டதுமே யோகேஸ்வரின் மனம் மகிழ்ச்சிக் கடலில் குதிக்க ஆரம்பித்துவிட்டது..."ரொம்ப ரொம்ப சந்தோசம் மா....நீ என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோனு குழம்பிட்டே இருந்தேன்....இப்போ தான் மனசுக்கு நிம்மதியாக இருக்கு....என்னோட நம்பிக்கை வீண் போகல....உன்னோட படிப்புக்கோ வேலைக்கோ எந்த பிரச்சினையும் வராது மா....அதெல்லாம் அப்பா முதலே சொல்லிட்டன்.."
ம்ம்....சரி பா....நீங்க பிரஸாகிட்டு வாங்க....சாப்பிடலாம்...
நீ சம்மதம்னு சொன்னதே அப்பாக்கு மனசு முழுக்க நிறைவா இருக்கு மா....இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமாக இருக்கன்...இதை முதல்ல உன் அம்மாகிட்ட சொல்லலாம் வா...
வாணி...வாணி என்றவாறே அவர் உள்ளே செல்ல துளசி அறைக்குள் வந்து கதவைச் சாத்திக் கொண்டாள்.குளியலறைக்குள் சென்று சவரைத் திறந்து விட்டவள்,அதுவரை நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீரை தண்ணீரோடு கரைக்க ஆரம்பித்தாள்...
இங்கே யோகேஸ்வரன் சொன்ன செய்தியைக் கேட்டதும் வீடே ஆரவாரத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது...கலைவாணிக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது..உடனே அவளைப் பார்க்க ஓடோடி வந்தவர் அவளது அறைக்கதவு சாத்தப்பட்டிருப்பதைக் கண்டதும் சிறிது தயங்கி நின்றார்...
"இப்போ எதுக்கு அக்காவை டிஸ்டேர்ப் பண்றீங்க,அவளே எப்பாவது ஒருக்காத்தான் வெட்கப்படுறாள்...மேடம் இப்போ டிரீம்ஸ் மூடுல இருக்காங்க,நீங்க இப்போ கரடி மாதிரி நுழைஞ்சு அவளைத் தொல்லை பண்ணாம இப்படி வந்து உட்காருங்க...அவளே கொஞ்ச நேரத்தில வெளிய வருவா..அப்போ அவளைக் கவனிச்சுக்கலாம்.."
சுசி சொன்னதும் சரியென்றேபட்டது கலைவாணிக்கு...அவரும் இந்த வயதைக் கடந்து வந்தவர்தானே..அதனால் அவள் வரும் போது பேசிக்கலாம் என்று நினைத்தவர் மற்றவர்களோடு அவரும் ஐக்கியமாகிக் கொண்டார்..யோகேஸ்வரன் சங்கரனோடு போனில் உரையாடிக் கொண்டிருந்தார்...திருமணத்திற்கான ஒப்புதலை அறிவித்தவர் ஏனையவற்றையும் கதைத்து முடித்துவிட்டு கலைவாணியை நோக்கி வந்தார்...
அங்கே அரவிந்தனின் வீடும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது...இதுவரை நாளும் கல்யாணமே வேண்டாமென்று இருந்தவன் துளசியை திருமணம் பண்ணிக் கொள்ள சம்மதித்ததே அவர்களுக்கு பேரின்பமாக இருந்தது...இப்போது துளசியும் சம்மதம் சொல்லிவிட்டாள் என்ற செய்தி அவர்களுக்கு மிகவும் இனிப்பானதாய் இருந்தது..
எல்லோரை விடவும் அரவிந்தன்தான் மிகவும் சந்தோசமாக இருந்தான்....அவனுக்கு உடனேயே துளசியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது...அவளை அள்ளி அணைத்து தட்டமாலை சுற்ற வேண்டும் போல் இருந்தது...இந்த இருபத்தெட்டு வருடங்களும் அவளுக்காகவே காத்துக்கிடந்தது போல் தோன்றியது அவனுக்கு....சீக்கிரமே திருமணத்தை நடத்திவிட வேண்டுமென்று எண்ணிக் கொண்டவன் தொலைபேசியின் சத்தத்தில் விழித்துக் கொண்டான்...மேசை மீதிருந்த போனை எடுத்தவன் அதில் தெரிந்த அர்ஜீன் என்ற பெயரைக் கண்டதும் முகத்தில் புன்னகை பூக்க போனைக் காதில் வைத்து "ஹலோ" என்றான்.....
தொடரும்....