அவன் தந்த பரிசு

இறைவா! எனக்கு
மூளையைப் பரிசளித்தாய்
சிந்திக்கத் தொடங்கினேன்
கவிதையைப் பரிசளித்தாய்.
எழுதத் தொடங்கினேன்
கண்களையும், காதுகளையும்
பரிசளித்தாய்.
படிக்கவும், கேட்கவும்
விமர்சிக்கவும் தொடங்கினார்கள்.
பாராட்டுக்களைப் பரிசளித்தார்கள்.
பாராட்டுக்களைப் பத்திரப்படுத்தினேன்.
விமர்சனங்களை உற்று நோக்கினேன்.
சரியானவற்றை உள்வாங்கினேன்.
உள்நோக்கங்களைப் புறந்தள்ளினேன்.
இந்த ஞானத்தையும் நீதான்
பரிசளித்தாய் இறைவா?

கற்களால் அல்ல..
சொற்களால் வசந்த மாளிகை,
சந்த மாளிகை என் சொந்த மாளிகை
எழும்பி நிமிர்ந்து
வானந்தொட்டுப்பார்க்க
ஆசைப்பட்டது.
ஆனாலும், ஆனாலும்
அடித்தளமோ
மண்ணுக்குள் ஆழத்தில்
மறைந்து கிடக்கிறது.

உன் பரிசுகள்
சில நேரங்களில்
கௌரவப்படுத்தின.
சில நேரங்களில்
கர்வப் படுத்தின.

உன் பரிசு
என்கையில் இருப்பதால்
என்னுடையதென்று
இறுமாந்து விட்டேன்
இறைவா!
ஓர் உண்மை சொல்லவா
இறைவா!
இந்தச் செருக்கும்
நீ தந்ததுதானே.

எல்லோருக்கும் கொடுக்காத
ஒரு பரிசையும் தந்தாய்
எல்லோருக்கும் கொடுத்த
ஒரு நோயையும் தந்தாய்.

மானகிரியில்
ஆலமர, அரசமர
நிழல் படர்ந்த ஊரணியில்
நீர் பருகியபோது
ஓர் ஊற்றைக் கண்டேன்.
கவிதை பீறிட்டுக் கிளம்பியது
வீறிட்டுப் பிறந்த குழந்தையாய்...

எழுதியவர் : கனவுதாசன் (26-Jun-17, 7:01 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : avan thantha parisu
பார்வை : 61

மேலே