பசி

===
குழந்தைகள் சாப்பிட்டதும்
தீர்ந்துவிடுகிறது அம்மாவின்
பரிமாறும் பசி.

சிறு மீன்கள் உண்டு
இரைப்பை நிறையா
திமிங்கில வாயாய் திறந்தபடி நீளும்
குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய
தந்தையின் முடிவற்ற பசி.

வசிப்பிடம் தேடி அலையும்
வடிவமற்ற பசி
ஏழைகளின் வயிற்றில்
நிரந்தரமாய் தங்கிவிடுகின்றது.

பீரிட்டு வருகின்ற
வெள்ளத்தைப்போல
கட்டுப்படுத்த முடியாததும்
தீயைப்போல மூடிவைக்க
முடியாததுமான பசி,
அடிக்கடி சிறைக்கு வந்துபோகும்
ஒரு பழக்கப்பட்டத் திருடனைப்போல்
வயிற்றுச் சிறைவந்து போகிறது.

உழைப்பாளியின் வருமானம் உண்ணும்
உள்நோக்கத்தோடு கட்டப்பட்ட
கட்டிடங்களிலிருந்தபடியே
அனுமதி சீட்டு என்னும்
அகன்ற வாய்திறந்து காத்திருக்கும்
கல்விசாலைகளின் பசி.

மருத்துவம் என்னும் மாய வயிற்றின்
பசிக்கு தீனியாக
நோய்கொண்டு போனாலும் போதாமல்
நோயாளியின் ஆயுளையும் கேட்கும்
மனைவாசல் எங்கும் திரிகின்ற
பணப்பேயின் பசி தீர்க்க
எழுதி வைக்கப்படுகின்றான் பல
குடும்பங்களின் சொத்து.

ஊரை விழுங்கும் முனைப்போடு
விரிகின்ற பதவி முதலைகளின் வாய்
கொண்டிருக்கும் பேராசை பசி
பரம்பரைக்கான உணவை
பதுக்கிவைக்கும் தானிய களஞ்சியமாய்
மறைந்திருக்கிறது சுவிஸ் வங்கி.


கூறு போட்டு சோறு போடும்
கூறுகெட்ட உலகம்
தங்களின் கூடாரத்துள் சனித்த
ஆயுதக் குழந்தைகளின்
அகோரப் பசிக்கு யுத்தப் பயிர்நாட்டி
மனிதம் அறுவடை செய்யும்
சமகால வாழ்வியலில் இங்கு
மறைந்தே போனது மனிதாபிமான பசி.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Jul-17, 2:42 am)
Tanglish : pasi
பார்வை : 2123

மேலே