கலகம் இல்லா உலகம்
தன்னல சண்டை பதவி சண்டை
மண்ணால் பெண்ணால் எங்கும் சண்டை
உறவிலும் சண்டை உரிமையிலும் சண்டை
பொறாமை குணத்தால் எங்கும் சண்டை
அன்பை மறப்பர் நற்பண்பை புதைப்பர்
ஆசையால் மனிதரை அடிமைப் படுத்துவர்
மதிக்கெட்டு உயிர்களுக்கு துன்பம் கொடுப்பர்
மக்கள் மனதில் புரட்சியைத் தூண்டுவர்
நேர்மை வழியும் மறந்து விடுவர்
நெஞ்சம் கல்லாகி நீதியை கெடுப்பர்
பேராசைக் கொண்ட மனிதர்களாலே - உலகம்
பேரழிவைக் கூட சந்திக்கக் கூடும்
சாதியும் மதமும் மனிதரைப் பிரிக்கிறது
சாதியால் மதத்தால் சண்டைகள் நடக்கிறது
மனிதரை மனிதரே கொன்று குவிப்பது
மதி இல்லாத வெறிச்செயல் அல்லவா
கலகம் இல்லா உலகம் வேண்டின்
கருணை நெஞ்சில் இருந்திட வேண்டும்
மனிதம் எங்கும் தழைத்திட வேண்டும்
வன்முறை அறவே ஒழித்திட வேண்டும்
அன்புமழை பொழிந்திட வேண்டும் - நல்ல
பண்பைக் கொண்டு உதவிட வேண்டும்
அடிமைத்தனம் நீங்கிட வேண்டும் - உலகில்
அமைதி எங்கும் நிறைந்திட வேண்டும்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்