அசாத்தியமும் சாத்தியமாகும்
கனவுகளை சுமக்கிறது
கனத்த இதயங்கள்
கரைசேரும் பலவேளை
கவிழ்கிறது சிலநேரம்
மழைநீரில் மிதக்கவிடும்
காகிதக் கப்பலாய் ...
எண்ணங்கள் மாறுகிறது
எல்லையும் மீறுகிறது
நெஞ்சமும் தவிக்கிறது
பாதைதவறிய பாய்மரப்படகு
திசைமாறி சென்றதால்
தத்தளிக்கும் நிலைபோல !
தூண்டிடும் ஆசைகளே
தூதுவிடுது மூளைக்கு
தூங்கிடும் உணர்வுகளை
தட்டி எழுப்புகிறது
தவறான தகவல்களை
வழியாய் கூறுகிறது
குற்றங்கள் புரிந்திட !
அகத்தின் அதிர்வுகள்
அதிரடியாய் சிலநேரம்
ஆர்ப்பரிக்கும் அலையாகி
ஆற்றிட வைக்கிறது
அடாவடியான காரியமும்
அச்சுறுத்தும் விதமாக !
ஆழ்கடல் அமைதியாய்
அடிமனதும் நிலைத்தால்
ஆரவார பேய்களும்
அடங்கிடும் நெஞ்சில்
அகிம்சை துளிர்விடும்
அசாத்தியமும் சாத்தியமாகும்
ஆனந்தமாகும் வாழ்க்கையும் !
பழனி குமார்