வானாளும் சூரியன் என்னை ஆள வந்தான்

நீ உரையாடிப்போன
வார்த்தைகளை
மீட்டிப் பார்ப்பதில்
மீண்டும் மீண்டும் - என்
ஜீவன் புத்துயிர் பெறுகிறது...

உன்மேல் வைத்த
எல்லையில்லா நேசம்
எந்த நொடி காதலாய்
உருமாற்றம் பெற்றதோ
இன்றுவரை அறியேன்...

வானாளும் சூரியன்
விண்தாண்டி வந்திந்த
கையளவு இதயத்தை
ஒளி தரச் சம்மதித்த கதை
இன்றளவிலும் மாயமாய்!..

நீயாகவும் நானாகவும்
நீண்டநாள் கொண்ட உறவு
நாளாக வளர்ந்து - இன்னதென்று
விளக்கிட முடியாப் புள்ளியில்
நாமாக பரிணாமம் பெற்றதோ?!..

ஒத்த கருத்துக் கொண்ட
ஒன்றையொன்று கவராத
ஒத்த முனைகளாய் இருந்தோம்...
விஞ்ஞானம் தோற்றுப்போனது
நம் காதல் மெய்ஞ்ஞானம் பேச...

எப்போதோ உன்னைப்
பிடித்துத் தான் இருந்தது..
இப்போதோ நீ - என்
ஆயுள் நிலைப்பாட்டின்
பிடிப்பாகவே மாறிவிட்டாய்...

நானறியாத இரகசியங்களும்
எனக்குள் இருக்கலாம்...
நீயறியா இரகசியங்களோ
எதுவுமே இருக்காது - என்
அடிமனதில் இருக்கிறாய்!..

அருகிருக்க தேவையில்லை..
தொலைவிலிருந்தாலும்
காந்த அலைகளாய் - உன்
காதல் கதிர்களே - இனியும்
எனைக் கட்டிக் காத்திருக்கும்!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:33 pm)
பார்வை : 42

மேலே