mistorey

முழுமை
மண்ணிறக் கண்கள் என் பார்வையைக் கைப்பற்றுகின்றன
அடியற்று ஆழ்ந்த இக்கோளங்களின் உறைவிடமான முகத்தின்பால் ஈர்க்கப்பட்டு
கொஞ்சம் முன்சாய்கிறேன்
ஒரு சிறிய, அகன்ற மூக்கு இளைப்பால் விரிகிறது,
நிறைந்த உதடுகள் காற்றிற்காய்த் தவிக்கின்றன,
நான் உன்னை அருகே இழுக்கிறேன்,
இந்தக் கண்களில் கணங்கள் கடந்துபோவதைப் பார்க்கிறேன்
உன் அம்மாவின் அக்கறை, உன் அப்பாவின் கவலை,
ஒரு காதல் பார்வை, ஒருகணத் தொடுகை, நினைவுகள்
அங்கே
எழுதி இருக்கின்றன
உனது உடல் எப்பொழுதுமே இப்படியே நேர்த்தியாய் இருக்கும்போலும்
ஒவ்வொரு தசையும் நாரும் பதற்றம் கொண்டிருக்கின்றது
மெருகான உனதுரு சுருண்டு
காத்திருக்கிறது, தயாராய், எனக்கேயென!
நான் நடுங்குகிறேன், ஆழமாய்த் தள்ளுகிறேன்,
தடையற்றுப் பாயும் குருதியைப் பார்த்தபடி
அந்த நொடியில் என்னை இழந்து
வேகமாய் நகர்ந்து வெட்டுகிறேன்
முழுமையான கொலை, ஒரு முழுமையான கொலைஞர்
உனதுடல் அதன் இறுதிக்கணங்களில் துடிக்கிறது
எனது காலடியில் உன்னை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இப்போது எங்களிடையே குருதி தடையின்றிப் பெருகுகிறது
எனதுடலின் வெட்டுக்காயங்கள் ஒவ்வொரு மூச்சின்போதும் பிளக்கின்றன
உணர்வற்ற எனது பார்வை அவர்கள் சண்டையினைத் தொடர்வதைக் கவனிக்கிறது
எல்லை மீறல், சரணாகதியடைந்தோரைக் கொலை செய்தல்.
முழந்தாள்கள் நெகிழ்ந்து வேதனையில் வீழ்கிறேன்
உருக்குலைந்த குரல்கள் வெற்றிக்கோஷமிடுகின்றன
வென்றவரும் தோற்றவரும் பிணைகையில்
வெற்றியின் ஒலிகள் மங்கிப்போகின்றன
வயலில் உடல்கள் கிடக்கின்றன
பெயரற்று தேசமற்று
விதிகள் பின்னிப் பிணக்குற்று
கைகள் நீட்டியபடி
ஒருபோதும் அறியப்படாத சமாதானத்துக்காகக் காத்திருக்கின்றன.

எழுதியவர் : (26-Jul-17, 12:26 pm)
சேர்த்தது : Padmamaganvetri
பார்வை : 59

மேலே