கலங்கரை_வெளிச்சம்_தேடி

நெஞ்சிலே சேர்த்து வைத்த
=நினைவுகள் அள்ளிக் கொண்டு
வஞ்சியே உன்னை நோக்கி
=வந்துநான் நின்ற வேளை
அஞ்சியே விலகிச் சென்று
=ஆசையை மூடி வைத்து
வெஞ்சினம் காட்டி என்னை
=விறகென எரித்து விட்டாய்.

கெஞ்சியே கேட்டு வாங்கும்
=கேவலக் காதல் வேண்டாம்
நஞ்சென ஆன போதும்
=நயமுடன் கேட்டு வாங்கி
சஞ்சலம் இன்றி உண்ணும்
=சங்கற் பம்கொண் டதாலே
விஞ்சியே போன உன்னை
=விலகியே சென்று விட்டேன்

வஞ்சக எண்ணம் கொண்டு
=வசீகர மாகப் பேசும்
நெஞ்சகத் தாரைக் கண்டே
=நித்தமும் நயமாய் பேசி
பஞ்சணை வரைக்கும் செல்ல
=பக்குவ மாய ழைக்கும்
நஞ்சரை நம்பும் நாட்டில்
=நல்லவர்க் கேது மதிப்பு.

அலகுகள் தன்னை நம்பி
=அழகிய பறவை வாழும்
உலகினில் பிறந்த எனக்கும்
=உயிரென தன்மா னமுண்டு
நிலவினை நம்பி மட்டும்
=இரவினில் பயண மில்லை
கலங்கரை விளக்கம் தேடி
=கரைவரும் கப்பல் நானே!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (29-Jul-17, 2:22 am)
பார்வை : 150

மேலே