போதி மரக் காற்று

புத்தர் உண்மையை உரைத்தார்
சுற்றி நின்றவர்கள் அவ்வுண்மையில்
தம் கடவுளரைத் தேடி மாய்ந்தனர்!

உள்ளத்தில் இல்லாத ஒன்றை
உண்மையில் இல்லை என்றனர்
உண்மையே இல்லாத ஒன்றை
உருவத்தில் உண்டாக்கிக் கொண்டனர்

உண்மையை உண்மையாகப் பார்க்காமல்
அதில் அவரவர் கற்பனையைத் தேடிய
அறிவீனத்தை நினைத்து புத்தர் மெளனமானார்!.

காலனின் வருகையில்
மெளனமும் மறைந்ததும்
சீடர்தம் மடமை விழித்தது
மெளனம் சம்’மதம்’ என்றே
மெல்ல மெல்ல கற்பிதமாக்கி
கல்லிலே சிலையும் வைத்தனர்

உண்மையோ இன்றும் என்றும்
போதிமரத்தடியிலும் வீசிக்கொண்டிருக்கிறது!

கற்பனையை விட்டிறங்கியவன் மட்டுமே
மெய்ஞானம் ‘கற்று’ வாங்கலாம்
மற்றவர்கள்
மென்மையான காற்று வாங்கலாம்!.

- Nsmsh 25/7/2017 at 3.15AM
#மழலைச்சொல்

எழுதியவர் : N.S.M. Shahul Hameed (30-Jul-17, 7:05 am)
பார்வை : 134

மேலே